For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலைய முனையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் கோரி சட்டசபையில் ஜெ. தீர்மானம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 2-வது முனையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வாசித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விமானப் போக்கு வரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் 2,015 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் மற்றும் விரிவாக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தினை, இந்தியக் குடியரசு துணைத் தலைவர் 31.1.2013 அன்று துவக்கி வைக்க உள்ளார்கள் என்று தெரிவித்து, இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

மத்திய விமானப் போக்கு வரத்துத்துறை அமைச்சரின் அழைப்பினை ஏற்று, இந்த விழாவில் கலந்து கொள்வதாக நான் தெரிவித்து இருந்தேன்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, பேரறிஞர் அண்ணாவின் இதயக் கனியாக விளங்கியவரும்; தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து, முதல்- அமைச்சராகவே மறைந்த வருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு வைக்க வேண்டும் என்றும், இது குறித்த அறிவிப்பினை விமான நிலைய துவக்க விழாவிற்கு முன்பே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி; மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதியிருந்தேன். ஆனால், இது குறித்து எந்த அறிவிப்பும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை.

எனவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனைய விழாவினை துவக்கி வைக்க வருகை புரிந்த இந்தியக் குடியரசு துணைத் தலைவரை முதல்வர் என்ற முறையில் மரபுப்படி வரவேற்றுவிட்டு; அந்த விழாவில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தேன்.

இந்தச் சூழ்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அண்மையில் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், நவீன மயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு பெயர் வைக்க வேண்டுமென்றால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலுடன் கூடிய வேண்டுகோள் மாநில அரசிடமிருந்து வரப்பெற வேண்டும் என்றும்; இதன் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்தக் கருத்துரு பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கீழ்க்காணும் தீர்மானத்தினை நான் முன்மொழிய விரும்புகிறேன்.

"சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியது போல்; உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியது போல், மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தெய்வமாக வாழ்பவரும், மக்களின் மகத்தான சக்தி பெற்றவரும்; வள்ளல் என அனைவராலும் போற்றப்பட்டவரும்; தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவரும்; அன்புக்கு அடிமையாய்; ஆணவத்திற்கு அடிபணியாதவராய் விளங்கியவருமான மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

இந்தத் தீர்மானத்தை இந்த மாமன்றம் ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

English summary
The Tamil Nadu assembly on Monday urged the Centre to take immediate steps to name the second domestic air terminal after the AIADMK founder and former chief minister late M G Ramachandran. An unanimous resolution was passed in this regard in the House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X