For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் நரபலி- ஜோதிடத்தை தடை செய்ய வேண்டும்: கி. வீரமணி

By Mathi
Google Oneindia Tamil News

Veeramani Urged to ban Jothidam
சென்னை: சென்னையில் குழந்தையை நரபலி கொடுத்திருக்கும் காட்டுமிராண்டித்தனத்தைத் தொடர்ந்து ஜோதிடத்தை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் குழந்தை நரபலி என்ற கோர சம்பவம் நம் நெஞ்சங்களில் ரத்தக் கண்ணீர் வடியச் செய்யும் கொடுமையான, அநாகரிகமான, காட்டுமிராண்டிகளாக நம் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதற்கான நிர்வாண அடையாளம் ஆகும்! சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில் - அவரது மனைவி கீதா; இவர்களின் இரண்டரை வயது பையன் விஷ்ணு. 9.4.2013 அன்று இவர்களது பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மூழ்கிக் கிடந்தான். அதைக் கண்ட உறவினர்கள் குழந்தையை மருத்துவனைக்கு உடனே எடுத்துச் சென்ற நிலையில், அக்குழந்தை வழியிலேயே இறந்து விட்டது.குழந்தை விஷ்ணு தண்ணீருக்குள் விழுந்து, (விபத்தாக) இறந்துவிட்டதாக எண்ணி, பெற்றோர் -குடும்பத்தினர் அதன் உடலை எரித்து விட்டனர்.

அந்தக் குழந்தையை அவருடைய சின்ன பாட்டியான மகேஸ்வரி என்ற பெண், தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்ததாக அக்கம் பக்கத்தாரிடம் அப்பகுதியில் உள்ள ஜோசியர் ஒருவர் தெரிவித்துள்ளார்; அதன்பிறகு காவல் துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது. மகேஸ்வரியை அழைத்து விசாரித்த போது, அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்! அவர் அளித்த வாக்குமூலம் எப்படி மூடநம்பிக்கை நோய் நம் மக்களின் மூளையை அறவே அரித்துத் துளை போட்டுள்ளது - என்பதற்கான அப்பட்டமான சான்றாகும்.

"7.4.2013 அன்று இரவு எங்கள் தெருவுக்கு வந்த ஒரு குடுகுடுப்பைக்காரனிடம் என் கையை நீட்டி, ஜோசியம் பார்த்தேன். அப்போது எனக்கும் என் குடும்பத்திற்கும் யாரோ ‘செய்வினை வைத்தாகத் தெரிவித்து, 2000 ரூபாய் கொடுத்தால் அதை அகற்றி விடுவதாக அந்த குடுகுடுப்பை ஜோசியன் சொன்னான். மறுநாள் அந்த குடுகுடுப்பைக்காரன் மந்திரித்த எலுமிச்சம் பழம், இரண்டு தாயத்து, குங்குமம் போன்ற பொருள்களைக் கொடுத்து தாயத்தை என்னையும், என் குழந்தையையும் கட்டிக் கொள்ளுமாறு கூறினான். குடு குடுப்பைக்காரன் என்னிடமிருந்து 1000 ரூபாய் பெற்றுக் கொண்டான். தாயத்தைக் கட்டிய சிறிது நேரத்திலேயே நான் சுயநினைவை இழந்தேன். குழந்தை விஷ்ணுவைப் பார்க்கும்போது எனக்கு ஆத்திரமாக இருந்தது.

(எனக்கும் செந்தில் குடும்பத்திற்கும் மன வேறுபாடு இருந்தது. என்றாலும் குழந்தை விஷ்ணு என்னிடம் வந்துதான் விளையாடிக் கொண்டிருப்பான்) கொலை செய்து விடலாம் என்று தோன்றியது. 9.4.2013 அன்று நான், குழந்தையை அழைத்து வந்து வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கிக் கொலை செய்ய முயற்சித்தேன், மூச்சுத் திணறி உயிருக்குப் போராடினான். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த தண்ணீர் பேரலில் குழந்தையைத் தலைகீழாகப் போட்டு விட்டு தவறி விழுந்த தாக நாடகம் ஆடினேன். அனைவரும் அதை நம்பினர் (சுயநினைவை இழந்தேன் என்பதும் நாடகத்தின் ஓர் அங்கம்தானோ!)

மகேஸ்வரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை விஷ்ணு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மகேஸ்வரி தோஷம் கழிக்கும் நோக்கத் தில் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நமது அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகளில் ஒன்று 51ஹ(h) பிரிவின்கீழ், அறிவியல் மனப்பான்மையை மனிதநேயத்தை ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் மனப் பாங்கை ஊக்குவிப்பது, வளர்ப்பது சீர்திருத்தை வலியுறுத்துவது என்று உள்ளது? இதை அமைச்சர்கள் பொதுத் தலைவர் களில் தொடங்கி, சாதாரண குடிமக்கள் வரை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்?வெறும் ஏட்டுச் சுரைக்காய் எழுத்துக் கள்தானே இவை?

ஜோசியங்கள், யாகங்கள் நடத்துவோர், காவி வேட கபடதாரிகள், மூடநம்பிக்கை மோசடி பேர் வழிகள் இவர்களையெல்லாம் தனிச் சட்டம் கொண்டு வந்து உள்ளே தள்ள வேண்டாமா? ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பில்லையா? அரசியல் தலைவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்களே! இங்கிலாந்து நாட்டு தலைவர் மார்கரெட் தாட்சருக்கே, கைபார்த்து, எலுமிச்சம் பழம் தந்து, ஏமாற்றிய சந்திரா சாமி கதையும், அவரை அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்திய நட்வர்சிங் அய் இங்கிலாந்து நாட்டுக்கான இந்தியத் தூதுவரும் பற்றி அண்மையில் ஒரு ஏட்டில் வெளிவந்த கட்டுரை எதைக் காட்டுகிறது? வெளிநாட்டுக் கும் இம்மோசடி மூடநம்பிக்கை வியாபாரம் ஏற்றமதி ஆகி விட்டது என்பதைத்தானே!

உடனடியாக, இந்தோனேஷியா நாட்டில் ஜோதிடத்தைத் தடை செய்ததுபோல மத்திய மாநில அரசுகள் ஜோதிடத்தை தடை செய்ய முன்வர வேண்டும். இவற்றைத் தலைமை தாங்கி நடத்துவோரே இந்த மூடநம்பிக்கை ஜோசிய அடிமைகளாக இருக்கும் நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், நிரந்தர அறிவியல் மனபான்மை ஓங்கிட இத்தகைய மூடநம்பிக்கை முட்புதர்களை அழித்திட வேண்டும் பகுத்தறிவு மனிதநேயப் பூங்காக் களை உருவாக்க வேண்டும். தனி மகேஸ்வரிகளைத் தண்டித்தால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது; நோய் நாடி நோய் முதல் நாடிட வேண்டும். அரசுகள் கடமை தவறலாமா?

English summary
DK president K Veeramani has urged the Tamilnadu Govt. to ban the Jothidam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X