For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது: கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

M.Karunanidhi
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்ற முடிவினை காமன்வெல்த் நடவடிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை சிங்கள பேரினவாத அரசை பற்றிய வேறு சில தகவல்களும் செய்தி தாள்களில் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. கடந்த வாரமே பிரிட்டன் அரசு இலங்கையில் மனித உரிமை மீறல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை 2012-ம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொடுமைகள் பல :

அதில், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் தாக்குதலுக்கு ஆளாவது, காணாமல் போவது, கொலை செய்யப்படுவது என பல்வேறு கொடுமைகளை சந்திக்கின்றனர். இலங்கை பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் இத்தகைய மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக சமூக ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகமாக உள்ளது. இவர்களை ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் திடீரென மாயமாகி விடுகின்றனர். சமூக நலத்துறை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் பகுதியில் பயமுறுத்தல், வழிப்பறி மற்றும் ஊழல் செயல்களை ஊக்குவித்து வருகிறார் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச விசாரணை கமிஷன் :

இத்தகைய மனித உரிமை மீறல்களையும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளையும் விசாரிப்பதற்காக சுதந்திரமான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச அளவிலான விசாரணை கமிஷன் அமைத்திட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

இந்திய கடற்படை கப்பல்களில் பயிற்சியா?

இலங்கை கடற்படையை சேர்ந்த 250 பேருக்கு இந்திய கடற்படை கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், இந்திய கடலோரக்காவல் படையை சேர்ந்த ‘‘சுஜாதா, தரங்கிணி, வருணா'' ஆகிய 3 கப்பல்கள் தான் இந்த பயிற்சியை அளித்துள்ளன என்றும் செய்திகள் வருகின்றன. இலங்கை கடற்படை துணைத்தளபதி ஒருவர் இலங்கை கடற்படையினரில் 80 சதவீதம் பேருக்கு இந்தியாதான் பயிற்சி அளிக்கிறது என்றே கூறியிருக்கிறார். இந்த செய்திகள் எல்லாம் நம்முடைய வேதனையை நாளும் நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

அக்கறை உண்டு :

இலங்கை ராணுவத்தின் எந்தப்பிரிவை சார்ந்தவர்களானாலும் அவர்களுக்கு இந்தியாவில் எந்தப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று நாமும் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள அத்தனை பேரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தும் கூட, இன்னமும் அத்தகைய பயிற்சிகள் தொடர்வது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. மத்திய அரசின் இத்தகைய செயலை தமிழகத்தின் சார்பில் கண்டிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

காமன் வெல்த்'' சட்ட மாநாடு :

இதற்கிடையே இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வந்துள்ள செய்தியின்படி, ‘‘காமன் வெல்த்'' சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18-ந்தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘‘கேப்-டவுன்'' நகரத்தில் நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையை நீக்க வேண்டும்:

அவர்கள் அனைவரும் ஒருமனதாக அந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தில், காமன்வெல்த் அமைச்சர்கள் சார்ந்த நடவடிக்கைக்குழுவின் கூட்டம் 26-4-2013 அன்று லண்டன் மாநகரத்திலே நடைபெறவுள்ளது; அந்தக் கூட்டத்தில் முக்கியமாக இலங்கைப் பிரச்சினை பற்றி பரிசீலனைசெய்து காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியத்துவம் பெறுகிறது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள், இலங்கையின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகே இலங்கை அதிபரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆதரவு தேவை:

எனவே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முடிவினை காமன்வெல்த் நடவடிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகள் எல்லாம் ஆதரிக்க வேண்டுமென்றும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான அழுத்தத்தை தரவேண்டுமென்றும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Commonwealth conference should not be held in Sri Lanka, said DMK Leader M.Karunanidhi again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X