For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமகவின் சட்டவிரோத நடவடிக்கைளை அரசு சகிக்காது- தடை விதிக்க தயங்காது: ஜெயலலிதா எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக அரசு சகிக்காது என்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கட்சிகளைத் தடை செய்யவும் அரசு தயங்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

தமிழக சட்டசபையில் காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.எல்.ஏக்கள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

டாக்டர் ராமதாஸ் கைது ஏன்?

டாக்டர் ராமதாஸ் கைது ஏன்?

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி 25.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடத்திய ‘சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவின் போது மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் 29.4.2013 அன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும்

ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும்

அதற்குப் பதில் அளித்து நான் பேசிய போது, சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச் செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் - ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த வித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இந்த அரசு தயங்காது என்றும் நான் தெரிவித்து இருந்தேன்.

மரக்காணம் சம்பவம்

மரக்காணம் சம்பவம்

இந்நிலையில், மரக்காணம் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, 30.04.2013 அன்று விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் மிகப் பெரிய அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும், 01.05.2013 அன்று அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலை நகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும் டாக்டர் ராமதாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டார். மரக்காணம் சம்பவத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவது வன்முறைக்கு வழிகோலும் என்பதாலும், சாதி சச்சரவுகளுக்கு வித்திடும் என்பதாலும், இது சம்பந்தமான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்ற முடிவை காவல் துறை எடுத்தது. இதனை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த தொடர் முழக்கப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, அதற்கான ஆணை அக்கட்சியின் விழுப்புரம் நகரச் செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டது.

பொறுப்பில்லாத ராமதாஸ்

பொறுப்பில்லாத ராமதாஸ்

காவல் துறையினர் முறையாக, போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்திருந்தும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அம்மாவட்டத்தில் அப்போது நிலவி வந்த சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாது, காவல் துறையினர் சட்டம் - ஒழுங்கினை பராமரிக்க ஒத்துழைப்பு அளிப்பதற்குப் பதிலாக, பொறுப்பில்லாமல் தடையை மீறி அனுமதி மறுக்கப்பட்ட போராட்டத்தை தலைமையேற்று நடத்த 30.4.2013 அன்று பிற்பகல் 12.15 மணியளவில், தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்ட விரோதமாகக் கூடியதால், வேறு வழியின்றி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டனர் என்றார்.

16 வாகனங்கள் தீக்கிரை-120 மரங்களுக்கு வெட்டு- 45 எரிப்பு- 165 அழிப்பு

16 வாகனங்கள் தீக்கிரை-120 மரங்களுக்கு வெட்டு- 45 எரிப்பு- 165 அழிப்பு

இதனைத் தொடர்ந்து, பட்டாளி மக்கள் கட்சியினர் நிகழ்த்திய வன்முறை சம்பவங்கள் காரணமாக இரண்டு சரக்கு லாரிகள் மற்றும் 14 பேருந்துகள் உட்பட 16 வாகனங்கள் தீக்கிரை ஆகியுள்ளதுடன், ஒரு அப்பாவி ஓட்டுநர் தீ காயம் அடைந்து இறந்துள்ளார். மேலும், வாகனங்கள் மீது கல் வீசி தாக்கிய சம்பவங்களில் ஒரு அப்பாவி லாரி ஓட்டுநர் மற்றும் அப்பாவி பயணி ஒருவர் இறந்துள்ளதுடன், 111 பேர் படு காயம் அடைந்துள்ளனர். மேலும், அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் என மொத்தம் 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியினரால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்.

பாலங்களுக்கு வெடி

பாலங்களுக்கு வெடி

இரண்டு பாலங்கள் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நெடுஞ்சாலைகளில் நிழல் தந்து வந்த 120 மரங்கள் சாலைகளில் வெட்டிச் சாய்க்கப்பட்டும், 45 மரங்கள்எரிக்கப்பட்டும், மொத்தம் 165 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும். வளர்ந்த பின், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத் தந்து, காய் - கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே வெட்டிச் சாய்ப்பதற்கு சமமாகும்.

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்

பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஒரு புறம் மரங்களை நடுவதாகக் கூறிக் கொண்டு, மறு புறம் மரங்களை வெட்டி சாய்ப்பது தீ வைத்து எரிப்பது என்பது "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்" என்ற பழமொழியைத் தான் நினைவு படுத்துகிறது. காவல்துறையினர், கடந்த பல நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறைச் செயல்களை தடுக்க முழு வீச்சில் தங்களது திறன் முழுவதையும் உபயோகித்து நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டும், முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும், மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் சட்டம் - ஒழுங்கைப் பராமரித்து வருகின்றனர். மேலும், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

20 பேர் மீது குண்டாஸ்-என்.எஸ்.ஏ.

20 பேர் மீது குண்டாஸ்-என்.எஸ்.ஏ.

இதுவரை 5,720 நபர்கள் தடுப்பு நடவடிக்கையாகவும், 1,744 நபர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 20 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துகள் நிறுத்தம்

பேருந்துகள் நிறுத்தம்

பாட்டாளி மக்கள் கட்சியினர், கடந்த சில நாட்களாக நிகழ்த்தி வரும் வன்முறைச் செயல்களினால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பகல் நேரங்களைப் பொறுத்த வரையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், நாமக்கல், தருமபுரி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், 1.5.2013 அன்று 1,601 தடப் பேருந்துகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இயக்கப்படவில்லை. பின்னர் அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக 10.5.2013 முதல் இது 219 ஆக குறைக்கப்பட்டது. இரவு நேரங்களைப் பொறுத்த வரையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி நகரப் பேருந்துகள் மாலை 6 மணிக்கு மேலும், புறநகர் பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேலும் இந்த மாவட்டங்களில் இயக்கப்படுவதில்லை. மொத்தத்தில், 2,267 தடப் பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்படவில்லை.

பாமகவின் வன்முறையால் களங்கம்

பாமகவின் வன்முறையால் களங்கம்

அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளினால் தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் துவங்க பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், மாநிலத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நல்ல அபிப்பிராயத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, தொழில் முதலீட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறை அமைந்துள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறைகளை காவல் துறை மிகுந்த துணிவுடனும், நெஞ்சுரத்துடனும், பொறுமையுடனும் எதிர்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் வகையில் காவல் துறை செயல்பட்டு வருகிறது.

அன்புமணி பேசுகையில்

அன்புமணி பேசுகையில்

சிறையில் இருந்து பிணையில் வெளி வந்த அன்புமணி பத்திரிகையாளர்கள் இடையே பேசுகையில், பா.ம.க.வினர் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார். 11.5.2013 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட ராமதாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை நியாயப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு, "பிரதமர் வீட்டு முன்பும், சோனியா காந்தி வீட்டு முன்பும் அண்மையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் ஒரு அமைச்சரும் தாக்கப்பட்டார். அதற்கு அனுமதி வாங்கவில்லை. அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்கள் ரயிலை மறித்தும், சாலைப் போக்குவரத்தை மறித்தும் மறியல் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதற்கு அனுமதியா வாங்குகின்றனர்? அவர்களை எல்லாம் அனுமதித்துவிட்டு, இந்த அரசு திட்டமிட்டு என்னை கைது செய்து, சிறையில் அடைத்து, பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி, இது எல்லாவற்றையும் செய்வது பா.ம.க.வினர் என்று மக்களிடம் பழி கூற திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராமதாஸின் விதண்டாவாதம்

ராமதாஸின் விதண்டாவாதம்

இது ஏன் என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே கம்யூனிஸ்ட்களும், ம.தி.மு.க.வும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்துக் கொண்டு தலித் ஓட்டுகளையும் பெற்று 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி பெறலாம் என்று நினைத்திருக்கிறார் என்று எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விதண்டா வாதத்தினை ராமதாஸ் முன் வைத்தது அபத்தத்தின் சிகரமாகவே உள்ளது.

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு

அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்தப்பட்டு ஓர் அமைச்சர் புது டெல்லியில் தாக்கப்பட்டார் என்று சொல்லி பட்டாளி மக்கள் கட்சியினரை ராமதாஸ் தூண்டி விடுகிறாரா? பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறுகையில், தமிழ்நாட்டில் நடக்கும் கலவரங்கள் அனைத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக அரசு, காவல் துறை இவை மூன்றும் தான் காரணம். பா.ம.க. எந்த வன்முறை செயலையும் செய்யாது" என்று கூறுவதன் மூலம் பா.ம.க.வினர் நிகழ்த்திய வன்முறைகளிலிருந்து தப்பித்துவிடலாம் என்று ராமதாஸ் நினைக்கிறார். இதைப் போன்று என் மீதும், தமிழக அரசின் மீதும், காவல் துறை மீதும் அவதூறுகளைப் பரப்பி வரும் ராமதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர் மீது அரசின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும்.

எதைச்சொல்கிறார் ராமதாஸ்

எதைச்சொல்கிறார் ராமதாஸ்

சிறையில் இருந்து வெளியே சென்ற உங்கள் தொண்டர்களுக்கு என்ன அறிவுரை சொல்லப் போகிறீர்கள்? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இது போன்ற அடக்குமுறைகளை கண்டு நானும் எனது தொண்டர்களும் சோர்வடைய மாட்டோம். ஆகவே, நீங்கள் எல்லாம் அமைதி காக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் ராமதாஸ். பெட்ரோல் குண்டுகளை வீசுவதிலும், கல் எறிவதிலும், பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்துவதிலும், அப்பாவிகள் உயிர் இழக்கச் செய்வதிலும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதிலும் சோர்வு அடைய மாட்டோம் என்கிறாரா?

வன்முறையை தூண்டுகின்றனர்

வன்முறையை தூண்டுகின்றனர்

ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் போராட்டம் தொடரும் என்று சொல்வதன் மூலம் தங்கள் கட்சியினரை மேலும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடவே தூண்டி விடுகிறார்கள். எனவே தான் ராமதாஸ் பிணையில் வெளி வந்த பின்பும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறை தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றும் பேருந்துகள் மீது கல் வீசி உள்ளனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

டிரைவர்களுக்கு தலைக்கவசம்

டிரைவர்களுக்கு தலைக்கவசம்

அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளின் கண்ணாடிகள் தாக்கப்படுவதால் பேருந்துகளின் முன் கண்ணாடி உடைந்து ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் பேருந்து ஓட்டுனர்களுக்கு தலைகவசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் பாடுபடக் கூடியதாகவும், பொதுமக்களின் நலனை முன் வைத்து செயல்படக் கூடியதாகவும், மற்ற அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமெனில், அதனை ஜனநாயக ரீதியாக, அற வழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். எதிர்ப்பை வன்முறை மூலம் தெரிவிப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

சட்ட விரோதச் செயல்களில் பாமக

சட்ட விரோதச் செயல்களில் பாமக

மேலும், கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், அவர்களை சமுதாயத்தின் முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்று, சட்ட விரோதச் செயல்கள் எதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது கட்சி தலைவர்களின் பொறுப்பும், கடமையும் ஆகும். அரசியல் கட்சிகளுக்கு உள்ள இந்த பொதுவான இலக்கணங்களுக்கு மாறாக, பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில தினங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்தல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்தல், அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதை எனது அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.

தடை செய்ய தயங்காது

தடை செய்ய தயங்காது

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களை தூண்டுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கிடப்பட்டு, அந்த இழப்பை 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியை தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா எச்சரித்தார்.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa today warn PMK to ban for its violences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X