For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூய்மையான எண்ணத்துடன் எளிமையாக வாழுங்கள்... முஸ்லீம்களுக்கு ஜெ. வாழ்த்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jaya extends Ifatar wishes to Muslims
சென்னை: தூய்மையான எண்ணத்துடன் எளிமையாக வாழுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா இப்தார் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏற்பாட்டின்படி, அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தியினை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய பெருமக்கள் 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் கடுமையாக நோன்பு இருந்து, நோன்பு திறப்பின் போது ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்வார்கள்.

நோன்பு இருக்கும் முதல் 10 நாட்கள் இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், மூன்றாவது 10 நாட்கள் துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் இறைவனை வழிபடுவார்கள். இப்படிப்பட்ட புனிதமான ரமலான் மாதத்தில், அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்னுடைய அழைப்பினை ஏற்று, இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்துள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் எனது நன்றியினையும், அன்பு கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூய்மையான எண்ணத்துடன் எளிமையாக வாழுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், வீணான பேச்சுக்களையும், செயல்களையும் தவிர்த்து கடமைகளை செய்யுங்கள். அனைவரிடத்தும் அன்பு செலுத்துங்கள்' என்ற இறை தூதர் நபிகள் நாயகத்தின் போதனையை அனைவரும் பின்பற்றி வாழ்வில் உயர்வு பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

நாம் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து நாடு வளம் பெற பாடுபடுவோம் என்று கூறி எனது அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியிருந்தார்.

கூட்டணித்தலைவர் பங்கேற்பு

நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, பழனியப்பன், பா.வளர்மதி, பி.தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், மூவேந்தர் முன்னணி கழக பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பாத்திமா முசப்பர், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Chief Minister Jayalalitha has extended her Iftar wishes to Muslims on the eve of Ramzan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X