For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சியாளர்களுக்கு விடை கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை- கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழைச் செம்மொழியாக அறிவிக்கவும், சேது சமுத்திரம் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரவும், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பல திட்டங்களைச் செயற்படுத்தவும், தலைமைச் செயலகத்திற்காகவும் - சட்டப்பே ரவை நடைபெறவும் ஓமந்தூரார் வளாகத்தில் அழகான கட்டிடத்தைக் கட்டக் காரணமாக இருந்த என்னையே ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றிய தமிழ்நாட்டு மக்கள், இந்தத் திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்திய இன்றைய ஆட்சியாளர்களுக்கு விடை அளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனம் செயலிழந்து கிடப்பதுதொடர்பான அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் கருணாநிதி

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

சோனியா காந்தி மூலமாக

சோனியா காந்தி மூலமாக

தமிழ்மொழி "செம்மொழி" எனும் சிறப்பைப் பெற்று; நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் தி.மு.கழகம். தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி வேண்டுமென்று பரிதிமாற்கலைஞர் போன்றவர்களும் ஏனைய தமிழ்ச் சான்றோர்களும், நூறாண்டுகளுக்கு மேலாக கண்ட கனவு, தி.மு.கழகம் பங்கு பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த காரணத்தால் சோனியா காந்தி வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக் கிடைக்கப் பெற்ற ஒன்றாகும்.

தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனம்

தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனம்

பின்னர், தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனம் கர்நாடக மாநிலத்திலே இருந்த நிலையில், அதனை தமிழகத்திற்கே மாற்றித் தர வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் தொடர்ந்து எழுப்பி, அதுவும் தி.மு.கழக ஆட்சியில்தான் கிடைத்தது. அந்த நிறுவனத்திற்காக தி.மு. கழக ஆட்சியில் தனியே தேவையான நிலம் ஒதுக்கப் பெற்று அங்கே எழில்மிகு கட்டிடங்கள் கட்டப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பாலாறு இல்லத்தில்

பாலாறு இல்லத்தில்

இதற்கிடையில் தற்காலிகமாக தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனம் தமிழக அரசுக்குச் சொந்தமான "பாலாறு" இல்லத்திலே நடந்து வந்தது. அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான நூலகத்தில் ஏராளமான அரிய ஆய்வு நூல்களும், பழம் பெரும் ஓலைச் சுவடிகளும் உள்ளன.

பாவேந்தர் பெயரால்

பாவேந்தர் பெயரால்

தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அந்த நூலகத்திற்கு இடம் இல்லை என்றதும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த தமிழகச் சட்டப்பேரவை, ஓமந்தூரார் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்ட காரணத்தால், அந்த இடத்திலே செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலகம் "பாவேந்தர்" பெயரால் அமையப் பெற்றது.

பொறுக்க முடியாத அதிமுக அரசு

பொறுக்க முடியாத அதிமுக அரசு

ஆனால் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் என்பதால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் செம்மொழி ஆய்வு நிறுவன நூலகத்திற்கு குறிப்பிட்டு வேறு எந்த இடத்தையும் ஒதுக்காமல் இரவோடு இரவாக அந்த இடத்தையே காலி செய்து விட்டார்கள்.

மூன்று அறைகளில் நூல்கள்

மூன்று அறைகளில் நூல்கள்

அந்த நூலகத்தில் இருந்த நூல்கள் எல்லாம் மூன்று அறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்றும், இடப்பிரச்சினை தொடர்பாக செம்மொழி ஆய்வு நிறுவனத்தினர் எழுதிய பல்வேறு கடிதங்களுக்கும் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை என்றும், ஆய்வு மாணவர்கள், தமிழறிஞர்கள் பயன்படுத்தி வந்த நூலகத்தையும், செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும் மீண்டும் செயல்படச் செய்ய வைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் ஏடுகளில் செய்தி வந்தன.

பெருமைப்படுத்திய மத்தியஅரசு

பெருமைப்படுத்திய மத்தியஅரசு

தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்துப் பெருமைப்படுத்திய மத்திய அரசு, செம்மொழித் தமிழ் குறித்த ஆய்வுப் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் தமிழ்மொழியைப் பரப்பும் பணிகளையும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

எனது கோரிக்கையை ஏற்று

எனது கோரிக்கையை ஏற்று

பின்னர் எனது கோரிக்கையை ஏற்று, சென்னையில் 17 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எழுப்பப்படும் கட்டடத்தில் 76 கோடியே 32 இலட்ச ரூபாய் செலவில் தமிழகத்தில், "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்" அமைத்திடவும், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவராகத் தமிழக முதலமைச்சர் பொறுப்பு வகிப்பார் எனவும் 30.1.2008 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நிரந்தரக் கட்டடம்

நிரந்தரக் கட்டடம்

அந்த முடிவின்படி, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு என்னிடம் ஒப்புதல் கோரப்பட்டு, அதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான நிரந்தரக் கட்டிடங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் செய்திருந்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

பேராசிரியர் தரும் செய்தி

பேராசிரியர் தரும் செய்தி

ஆனால் தற்போது செம்மொழியின் நிலை என்ன என்பதைப் பற்றி பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கும் செய்தி என்ன தெரியுமா? "மிக ஆரவாரத்துடனும், கோலாகலத்துடனும், நம்பிக்கையோடும் தொடங்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திக்குத் தெரியாத காட்டில் இருக்கிறது.

நிறுத்தி வைக்கப்பட்ட விருதுகள்

நிறுத்தி வைக்கப்பட்ட விருதுகள்

தொடர்ந்து மாநில, மத்திய அரசுகள் அதன் செயல்பாட்டில் அலட்சியம் காட்டி வந்தால், ஒரு கட்டத்தில் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிலை கூட வரலாம். செம்மொழி நிறுவனத்தால் கொடுக்கப்படும் விருதுகளும் இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டே வருகிறது. கொடுக்கப்படும் நிதியும் செலவழிக்கப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்படுகிறது.

ஆட்சிமன்றக் குழு திருத்தப்படவில்லை

ஆட்சிமன்றக் குழு திருத்தப்படவில்லை

நிறுவனத்தை நடத்தும் ஆட்சி மன்றக் குழு திருத்தி அமைக்கப்படவில்லை. ஆட்சிக் குழு இல்லாததால் கல்விக் குழு மற்றும் நிதிக் குழுக்களும் அமைக்கப்படவில்லை. நிறுவனத்துக்கு முழு நேர இயக்குனர் இல்லை. தலைமை மற்றும் ஆட்சிக் குழு இல்லாததால் நிறுவனத்தின் செயல்பாடுகளின் சுணக்கம்; தேக்கம். புறநகரான பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் செம்மொழி நிறுவனக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆய்வுப் பணிகள் பாதிப்பு

ஆய்வுப் பணிகள் பாதிப்பு

இதனால், பல ஆய்வுப் பணிகள் பாதிக்கப்பட்டுக் கிடக்கின்றன. 120 ஊழியர்கள் பணியாற்றிய இந்நிறுவனத்தில் இப்போது 72 பேர்தான். அவர்களுக்கும் சம்பளப் பிரச்சினைகள்; பணிகளில் உற்சாகம் இல்லை" என்றெல்லாம் அந்தத் தமிழ்ப் பேராசிரியர் தெரிவித்திருக்கிறார்

ரூ. 1 கோடி அளித்தேனே..

ரூ. 1 கோடி அளித்தேனே..

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்காக என்னுடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை அளித்து, அதிலே கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுக்கொருமுறை பத்து இலட்ச ரூபாய் மதிப்பில் விருது ஒன்றினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது, அஸ்கோ பர்போலாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

அஸ்கோ பர்போலாவோடு சரி

அஸ்கோ பர்போலாவோடு சரி

அதன் பிறகு இரண்டாண்டுகள் ஆகியும் அந்த விருது இன்று வரை வழங்கப்படவில்லை. தமிழ் மொழிக்காக நடைபெற்ற பல்வேறு பணிகள் நின்று போய்விட்டன.

ஆட்சியாளர்களுக்கு விடை கொடுக்கும் நாள்

ஆட்சியாளர்களுக்கு விடை கொடுக்கும் நாள்

தமிழைச் செம்மொழியாக அறிவிக்கவும், சேது சமுத்திரம் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரவும், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பல திட்டங்களைச் செயற்படுத்தவும், தலைமைச் செயலகத்திற்காகவும் - சட்டப்பேரவை நடைபெறவும் ஓமந்தூரார் வளாகத்தில் அழகான கட்டிடத்தைக் கட்டக் காரணமாக இருந்த என்னையே ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றிய தமிழ்நாட்டு மக்கள், இந்தத் திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்திய இன்றைய ஆட்சியாளர்களுக்கு விடை அளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has slammed the state govt for its carelessness towaards Tamil classical language research institute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X