For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமோ?: டாக்டர் ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

No safety for women in Woman CM's state: Dr. Ramadoss
சென்னை: ஒரு பெண் முதல்வரின் ஆட்சி நடைபெறும் மாநிலத்தின் பெண்களுக்கே பாதுகாப்பற்ற நிலை நிலவுவது வெட்கக் கேடான ஒன்றாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான மற்ற கொடுமைகளும் அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.

தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, 2012-ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் பாலியல் வன்கொடுமைகள் 50 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.

கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 291 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டின் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 436 ஆக அதிகரித்திருக்கிறது. தலைநகர் சென்னையில் மட்டும் 7 மாதங்களில் மொத்தம் 42 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதே காலத்தில், தமிழகத்தில் 585 பேர் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர்; 698 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 1130 பேர் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்துமே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் ஆகும்.

குடும்ப கவுரவம் கருதி புகார் செய்யப்படாத நிகழ்வுகளையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். அண்மைக் காலமாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவது நல்ல அறிகுறியாக தோன்றவில்லை. ஒரு பெண் முதலமைச்சரின் ஆட்சி நடைபெறும் மாநிலத்தின் பெண்களுக்கே பாதுகாப்பற்ற நிலை நிலவுவது வெட்கக் கேடான ஒன்றாகும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு மதுவும், போதைப் பொருட்களும் தான் காரணமாகும். தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத தெருக்களே இல்லை என்று கூறும் அளவுக்கு திரும்பிய திசையெல்லாம் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பத்து வயது சிறுவர்கள் கூட பள்ளிக்கு செல்லாமல் மதுக்கடை குடிப்பகங்களில் நடமாடுவது அன்றாட காட்சிகளாகிவிட்டன. அதேபோல், போதை பொருள் விற்பனையும் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

குறிப்பாக, சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒருவேளை எந்த பகுதியிலாவது போதைப் பொருள் கிடைக்கவில்லை என்றால் கூட, ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது கல்லூரி விடுதி அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்றால் நிச்சயமாக கிடைத்துவிடும் என்ற அவலநிலை காணப்படுகிறது. போதைப் பொருள் விற்பனை குறித்து காவல்துறையினருக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும் ஆளுங்கட்சியினரின் தலையீடுகள் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்துவிட்ட நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருகி வருவதைப் பார்க்கும்போது, தமிழகம் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த நிலையை மாற்றி பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளித்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு போதை தான் முதன்மைக் காரணம் என்பதால், தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடவும், போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss told it is a shame that women are unsafe in a state ruled by a woman CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X