For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவு பாதுகாப்பு சட்டத்தால் லாபமே: ஜெயலலிதா தான் எதிர்க்கிறார்- கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

Food security bill: Karunanidhi slams Jayalalithaa
சென்னை: அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்ப்பதற்காக உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு லாபமில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு ஏதோ தமிழகத்திற்கு எதிராகவே இயற்றி உள்ளதைப் போலவும், அதை திமுக ஆதரித்ததால், தமிழக மக்களுக்கு பெரிய துரோகத்தை இழைத்து விட்டதாகவும் ஒரு மாயமான தோற்றத்தை உருவாக்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மானிய விலையான கிலோ 3 ரூபாய் வீதம் மாதத்திற்கு 2 லட்சத்து 37 ஆயிரத்து 900 டன் அரிசியை, மத்திய அரசிடம் வாங்குவதற்கு, இனிமேல் ஆண்டு ஒன்றுக்கு ஆகும் செலவு 856 கோடியே 44 லட்சம் ரூபாய் மட்டுமே!

அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 65 ஆயிரம் டன் அரிசியை, கிலோ ஒன்றுக்கு ரூ.3 வீதமும்; வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் டன் அரிசியை, கிலோ ஒன்றுக்கு ரூ.5.65 வீதமும்; வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கான திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 26 ஆயிரம் டன் அரிசியினை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 வீதமும் வழங்கி வருகிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இனிமேல் 8 லட்சத்து 14 ஆயிரம் டன் அரிசியை மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக புதிய சட்டத்தின் கீழ் வழங்கவிருக்கிறது. இது தமிழகத்திற்கு லாபமா? நட்டமா?

வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்காக இனிமேல், கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 வீதம் மத்திய அரசிடம் தமிழக அரசு வாங்க வேண்டிய அரிசியின் அளவு மாதம் ஒன்றுக்கு 58 ஆயிரத்து 100 வீதம் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சத்து 97 ஆயிரம் டன்கள் மட்டுமே! இது தமிழகத்திற்கு லாபமா? நட்டமா? என்பதையும் நடுநிலையாளர்கள் தான் சொல்ல வேண்டும்.

வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்காக வாங்க வேண்டிய அரிசிக்காக ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ஆகும் செலவு 578 கோடி ரூபாயாகும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்காக வாங்க வேண்டிய அரிசிக்காக ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ஆகும் செலவு 856 கோடி ரூபாயாகும். இரண்டும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசிக்காக தமிழக அரசு கொடுக்க வேண்டிய மொத்த விலை 1,434 கோடி ரூபாயாகும்.

ஆனால் தற்போது மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் பெறப்படும் அரிசிக்காக, தமிழக அரசு கொடுக்கின்ற விலை 2,231 கோடி ரூபாயாகும். எனவே உணவு பாதுகாப்பு சட்டம் காரணமாக தமிழக அரசுக்கு ஆகும் செலவு ஆண்டு ஒன்றுக்கு 797 கோடி ரூபாய் குறையும். இது தமிழகத்திற்கு லாபமா? நட்டமா? புதிய சட்டத்தை திமுக ஆதரித்தது சரியா? தவறா?

ஆனால் இதையெல்லாம் அப்படியே மறைத்துவிட்டு, தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றெல்லாம் ஜெயலலிதா சொல்கிறார்.

வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அரிசி விலை கிலோ ரூ.8.30 என்பதை மத்திய அரசு உயர்த்திவிடவும் இல்லை. அதற்கான ஆணை எதையும் பிறப்பித்துவிடவும் இல்லை.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம், தமிழகம் ஏற்கனவே அனுபவித்து வந்த சலுகைகளும், உரிமைகளும் பாதிக்கப்படாது. மாறாக, ஆண்டுக்கு தமிழ்நாட்டிற்கு ரூ.797 கோடி அளவிற்கு செலவு குறையும் வகையில் திமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, பெற்றுத்தந்துள்ள உண்மையை மறைப்பதற்காகவும், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்ப்பதற்காகவும் தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்படியெல்லாம் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்திற்கு இதுவரை ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக வழங்கிய 36 லட்சத்து 78 ஆயிரம் டன் அரிசியின் அளவு எந்த நிலையிலும் குறைக்கப்பட்டுவிடக்கூடாது என்று தி.மு.கழகத்தின் சார்பிலும் நேரடியாக கோரிக்கை வைக்கப்பட்டது.

அதே கோரிக்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் மூலம் எழுதியிருந்தார். மத்திய அரசினால் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, உணவு பாதுகாப்பு மசோதாவில் அது அரசு திருத்தமாகவே கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, அந்த சட்டத்தை திமுக ஆதரித்ததில் என்ன தவறு இருக்க முடியும்? இதுவரை தமிழகம் பெற்று வந்த அரிசியின் அளவு சிறிதளவும் குறைக்கப்படவில்லை.

வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு வழங்கிய அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 என்பதிலும் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியா முழுவதிலும் உள்ள ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்குவதற்காக இந்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லை; திருத்தங்களை ஏற்கவேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான பாஜகவே இந்த சட்டத்தை ஆதரித்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

அதிமுக சார்பில் இந்த சட்டத்தை ஏற்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, சட்டத்தை ஏற்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi slammed ADMK government for opposing the food security bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X