அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடி திருவாதிரை..மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள்..அரியலூரில் ஜூலை 26ல் உள்ளூர் விடுமுறை

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஜூலை 26ஆம் தேதி ஆடி திருவாதிரை தினத்தன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

அரியலூர்: மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு ஜூலை 26ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரண்மனை அமைத்து மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தார்.

Aadi Tiruvadhirai Rajendra Cholans birthday collector announces Local holiday on July 26 in Ariyalur

மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. அண்மையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை தினமானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமரிசையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதி மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினைச் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆடி திருவாதிரை விழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவியர் மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆவார். அரியலூர் மாவட்டம் முதல் பெரம்பலூர் மாவட்டம் வரை நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய மாமன்னர் மற்றும் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளையும் வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்தினார். ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன் பல்வேறு நாடுகளை வென்று மிகவும் சிறப்புடன் ஆட்சி செய்தார்.

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் சதயவிழா கொண்டாடுவதைப் போல நம் மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கும் அரசு விழா கொண்டாட வேண்டும் என்பது இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் நீண்ட காலக் கோரிக்கையாகும். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவான ஆடித் திருவாதிரை விழாவினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வெகு விமரிசையாக வருகிற 26.07.2022 அன்று கொண்டாடப்படவுள்ளது.

அதன் அடிப்படையில் ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துறை சார்ந்து ஒதுக்கப்பட்டுள்ள விழாத் தொடர்பாக பல்வேறு பணிகளை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நமது மாமன்னர் ராஜேந்திர சோழனின் சிறப்பை வருங்கால சந்ததியினர் அறிந்து பயன்பெறும் வகையிலும் கங்கைகொண்ட சோழபுரம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சாத்தனூர் கல்மரம், தொல்லியல் ஆய்வகம் போன்ற பல்வேறு சுற்றுலா தளங்களை பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவிற்கு தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அனைவருடனும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வரும் 26ஆம் தேதியன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

English summary
Ariyalur District Collector has announced that 26th July will be a local holiday on the occasion of Aadi Thiruvadhirai, the birthday of Mamannan Rajendra Cholan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X