அரியலூர் அரசு பஸ்ஸில் 12 வயது மாணவியிடம் அநாகரிக சீண்டல்.. அந்த போதை ஆசாமி யார் தெரியுமா?
அரியலூர்: தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் அரசு பஸ்களில் பயணிக்கும் பள்ளி மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதோ, அரியலூரில் ஓடும் அரசு பேருந்திலேயே 12 வயது பள்ளி மாணவியிடம் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் கோவையில் 4 வயது சிறுமிக்கு அரசு பேருந்து டிரைவர் ஒருவர், பாலியல் தொல்லை தந்த சம்பவம் பலரையும் அதிர வைத்தது.. தொண்டாமுத்தூர் அருகே உள்ள வஞ்சியம்மன் நகரை அடுத்த திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (36).

கோவை அரசு பஸ்
இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பக்கத்து ஊரிலுள்ள தனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சங்கர் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டுக்கு வெளியே அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதைப் பார்த்த சங்கர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ரகசியமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் சென்று நடந்ததை சொல்லவும், இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூரில் அதிர்ச்சி
இந்த கோவை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது அரியலூரிலும் ஓடும் அரசு பஸ்ஸில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் நடந்துள்ளது.
அரியலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து வி.கைகாட்டி வழியாக ஜெயங்கொண்டம் செல்லும் அரசு பேருந்து ஒன்று நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் முடிந்து மாணவ, மாணவிகள் வீடு திரும்பிய நேரம் என்பதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது.
பஸ் புறப்பட்ட 10 நிமிடங்களில், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை கடந்து அரசு பல்துறை வளாகம் அருகே சென்றபோது, 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியிடம், ஒருவர் அநாகரிகமாக தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். உடனே சக பயணிகள் அந்த நபரை பிடித்து சரமாரியாக வெளுத்தனர்.
ஆக்டிங் டிரைவர்
பிறகு பஸ்ஸை, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பொன்பரப்பி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பதும், ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, அவர் மதுபோதையில் இருந்ததும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து அருண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
அதிரடிப்படை இருந்தும்...
இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க, ஆளும் தவெக அரசு புதிதாக "சிங்கப்பெண் அதிரடிப்படை"யைத் தொடங்கி வைத்துள்ளது.
இருந்தாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் அரசு பேருந்துகளிலேயே இத்தகைய சம்பவங்கள் நடப்பதும், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களே இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களும் சிறுமிகளும் அச்சமின்றிப் பேருந்துகளில் பயணிக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது..!!!




Click it and Unblock the Notifications
