ஷாக்.. பாரத் ஜோடோ யாத்திரையில் 4 பேர் மீது பாய்ந்த மின்சாரம்.. காங்கிரஸ் கொடியால் நேர்ந்த சோகம்
பெங்களூர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஊர்வலத்தில் இன்று 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கொடி கட்டப்பட்ட இரும்பு கம்பி மின்வயரில் உரசிய நிலையில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க போராடி வருகிறது. கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணத்தை துவக்கி உள்ளார்
இந்தியா முழுவதும் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்கி உள்ளார்.

கர்நாடகத்தில் நடைப்பயணம்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைப்பயணம் கடந்த மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் துவங்கியது. சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவை ராகுல் காந்தி 150 நாட்களில் கடக்க உள்ளார். இந்த பாத யாத்திரை தமிழ்நாடு, கேரளாவை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது.

1000 கிலோமீட்டரை கடந்த யாத்திரை
தற்போது வரை ராகுல் காந்தி 1000 கிலோமீட்டரை கடந்துள்ளார். இன்று 39 வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனக்கல்லு கிராமத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை துவங்கினார். இதில் வழக்கம்போல் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கைகளில் காங்கிரஸ் கட்சியின் தேசியக்கொடியை ஏந்தி ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

4 பேரை தாக்கிய மின்சாரம்
இந்த வேளையில் ஒருவர் இரும்பு கம்பியின் மேற்புறத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை கட்டி உயரே பறக்கவிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொடி கட்டப்பட்டு இருந்த இரும்பு கம்பி மின்வயரில் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை மின்சாரம் தாக்கியது. மேலும் அவருடன் நின்ற 3 பேரின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கி 4 பேரும் காயமடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் 4 பேரையும் மீட்டு அருகே இருந்த ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பாரத் ஜோடோ யாத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications