பெங்களூரில் இளம்பெண்களை.. வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர்! உடனே தட்டி தூக்கிய போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் சாலையில் செல்லும் பெண்களை அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்து தவறாகப் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகாரளித்திருந்த நிலையில், தானாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்த போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது நமக்குப் பல்வேறு வழிகளில் கைகொடுக்கிறது. யார் என்றே தெரியாதவர்களையும் ஈஸியாக தொடர்பு கொள்ள முடிகிறது, குடும்பத்தினர் தொலைதூரத்தில் இருந்தாலும் அவர்களுடன் தொடர்பு பராமரிக்கச் சமூக வலைத்தளங்கள் உதவுகிறது. அதேநேரம் இதை வைத்து சிலர் தவறான மற்றும் மோசமான செயல்களிலும் ஈடுபடவே செய்கிறார்கள்.

பெங்களூரில் அனுமதி இல்லாமல் வீடியோ
அப்படித் தான் பெங்களூரில் சர்ச்சைக்குரிய சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் பெண்களை அவர்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்துப் பதிவேற்றிய 26 வயது இளைஞரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். சர்ச் தெரு, கோரமங்களா போன்ற நகரத்தின் பிரபலமான பகுதிகளில் இவர் பெண்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியது தெரிய வந்துள்ளது.
புகார் அளித்த பெண்ணையும் அந்த நபர் வீடியோவாக எடுத்துப் பதிவிட்டிருக்கிறார். இதை அறிந்த அந்தப் பெண் வீடியோவை நீக்குமாறு பலமுறை புகார் அளித்தும் எந்தவிதப் பதிலும் இல்லை. அந்த வீடியோ பரவிய பிறகு, யார் என்றே தெரியாத நபர்களிடமிருந்து ஆபாசமான மெசேஜ்களை பெறத் தொடங்கியதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
இளம்பெண் குற்றச்சாட்டு
இது குறித்து அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "இவர் சர்ச் தெருவை படம்பிடிப்பது போல் நடிக்கிறார். ஆனால் உண்மையில் பெண்களைப் பின்தொடர்ந்து அவர்களின் சம்மதமின்றிப் பதிவு செய்கிறார்.. நான் இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் வேறு வழியில்லை. நான் பெங்களூரில் படித்து வருகிறேன். சர்ச் தெருவில் நான் பொதுவெளியில் இருந்தபோது என்னைத் தவறாக வீடியோ எடுத்து எனது அனுமதியின்றி ஆன்லைனில் பதிவேற்றியுள்ளனர்" என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும், "மேலும் அந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் பெங்களூர் தெருக்களைக் காட்டுவதாகச் சொன்னாலும் உண்மையில், அந்தப் பக்கம் பெண்களை ரகசியமாகப் பின்தொடர்ந்து படம்பிடித்து அந்த வீடியோவை தான் பதிவிடுகிறது.. இதுபோன்ற வீடியோ எடுக்கப்படுவது பெண்களுக்கே தெரியாது" என்று பதிவிட்டுள்ளார்.
களத்தில் இறங்கிய போலீஸ்
இது ஒரு பெரிய மீறல் என்று குறிப்பிட்ட அவர், பொது இடத்தில் இருப்பது அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பப்ளிக்காக வைத்திருப்பது என்பது வீடியோ எடுக்க ஒப்புதல் அளிக்கிறோம் என்று அர்த்தமல்ல எனவும் கூறினார். தனது சிக்கலை விரிவாக விளக்கிய அந்தப் பெண் உதவிக்காக பெங்களூர் போலீஸ் மற்றும் பெங்களூர் சைபர் கிரைம் போலீசாரை டேக் செய்தார்.
உடனே கைது
அந்தப் பெண்ணின் பதிவு இணையத்தில் பேசுபொருள் ஆன நிலையில், பெங்களூர் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அந்த பேஜ்ஜை நடத்தி வருவது யார் என்பதைக் கண்டறிந்த போலீசார், சில மணி நேரத்தில் 26 வயதான குர்தீப் சிங் என்ற இளைஞரைக் கைது செய்தனர். ஹோட்டல் மேலாண்மை பட்டதாரியான குர்தீப் சிங் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார். அவர் பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். அதிகாரிகள் தாங்களாகவே வழக்கை எடுத்து அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
அதேநேரம் அந்தப் பக்கத்தில் உள்ள வீடியோக்களை உடனடியாக நீக்க முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பாலிசிக்களால் வீடியோவையும் அந்த பக்கத்தையும் முடக்குவது கடினமானதாக மாறியுள்ளது. இதையடுத்து அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவில் இது குறித்து கடிதம் அனுப்ப பெங்களூர் போலீஸ் முடிவு செய்துள்ளது.
முதல்முறை இல்லை
சமீபத்தில் தான் பெங்களூர் மெட்ரோவில் பயணம் செய்யும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டதாக வேறு ஒரு சமூக வலைத்தளப் பக்கம் முடிக்கப்பட்டது.. அந்த கணக்கை நடத்தி வந்த ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான திகந்த் என்பவர் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். தினமும் மெட்ரோவில் பயணம் செய்யும் போது, அவர் பெண்களை வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு அந்தப் பக்கம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications