ரூ.48 லட்சம் செலவு பண்ணி.. ஆண்மைக்குறைவுக்கு மருந்து எடுத்த பெங்களூர் ஐடி ஊழியருக்கு நடந்த அதிர்ச்சி
பெங்களூர்: பெங்களூரில் ஆண்மைக்குறைவுக்கு ரூ.48 லட்சம் செலவு செய்து மருந்து வாங்கி சாப்பிட்ட ஐடி ஊழியருக்கு கடைசியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கிட்னி பாதிக்கப்பட்டது. விஜய் குருஜி என்ற ஆயுர்வேத மருந்து விற்பனை செய்து வருபவர் கொடுத்த பரிந்துரைப்படி தன்னிடம் காசு இல்லாதபோதும், வங்கியில் லோன் வாங்கி மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். இது குறித்து ஐடி ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஞானபாரதி பகுதியில் தேஜஸ் என்பவர் வசித்து வருகிறார். ஐடி ஊழியரான இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், மன வேதனை அடைந்த தேஜஸ், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதற்கிடையில், ஆண்மைக்குறைவுக்கு விஜய் குருஜி என்பவர் ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த தேஜஸ், தனக்கு உள்ள பாதிப்பை அவரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து யஷ்வந்தபுரத்தில் உள்ள விஜயலட்சுமி ஆயுர்வேத மருந்து கடைக்கு சென்று, "தான் கூறும் ஒரு மருந்தை வாங்கி சாப்பிடுங்கள், சரியாகிவிடும்" என்று விஜய் குருஜி கூறியுள்ளார்.
இவரது பேச்சை நம்பி, தேஜஸ் அந்த கடைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். ஒரு கிராம் மருந்து மற்றும் தைலத்தின் விலை ரூ.1.60 லட்சம் என வாங்கியுள்ளார். இதுவரை 17 லட்சத்திற்கு மருந்து வாங்கிய தேஜஸுக்கு அவரது ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகவில்லை. இதனால், வங்கியில் கடன் வாங்கி அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறார்.
மருந்து வாங்குவதற்காக வங்கியில் ரூ.20 லட்சம் தனிநபர் கடன் வாங்கியுள்ளார். ஆனால், நாட்கள் ஆக ஆக தேஜஸுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைக்கு தேஜஸ் சென்றபோதுதான் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த தேஜஸ், லட்சக்கணக்கில் செலவு செய்து மருந்து சாப்பிட்டும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து, காவல்துறையில் தேஜஸ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விஜய் குருஜி மற்றும் ஆயுர்வேத மருந்து கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உரிய அனுமதி, அங்கீகாரம், மருத்துவப் படிப்பு இல்லாதவர்கள் சொல்வதை கேட்டு மக்கள் சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.. மீறி எடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நடந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications