வேற லெவல்.. சம்பளத்தை கொட்டி கொடுக்கும் தென்னிந்திய நகரம்.. இதுதான் டாப்.. சென்னையும் சும்மா இல்லை
பெங்களூர்: இந்தியாவில் எந்த நகரத்தில் அதிகபட்ச சம்பளம் கிடைக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் இரு தென்னிந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் நம்மைத் தாக்கிய கொரோனாவால் கண்ணை மூடி திறப்பதற்குள் நாம் சில ஆண்டுகளை இழந்துவிட்டோம். இந்த கொரோனா பாதிப்பில் இருந்து இப்போது தான் நாம் மெல்ல மீண்டு வருகிறோம்.

இந்த கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் மற்றொரு புறம் இருக்கிறது. இதனால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன..
வேலையிழப்பு:
கொரோனாவால் பல இடங்களில் வேலையிழப்பும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.. அமெரிக்காவில் டாப் நிறுவனங்கள் கூட தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களை வேலையை விட்டு அனுப்பி வருகிறது. கூகுள், ட்விட்டர் என எந்தவொரு நிறுவனமும் இதில் விதிவிலக்கு இல்லை. இந்தியாவிலும் கூட டாப் ஐடி நிறுவனங்களும் கூட ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் காலத்தில் பொருளாதாரம் மோசமடையும் என்ற அச்சத்திலேயே அவர்கள் இப்படிச் செய்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க இந்தியாவில் ஐடி துறை தவிர மற்ற துறைகளில் ஒப்பீட்டளவில் பெரியளவில் ஆட்குறைப்பு நடக்கவில்லை என்றே சொல்லலாம். இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரே வேலைக்கு ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு ஊதியம் கிடைக்கும். குறிப்பாக இந்தியாவின் டாப் நகரங்களில் அதிக ஊதியம் கிடைக்கும்.
ஊதியம்:
இதற்கிடையே எந்த நகரத்தில் அதிக ஊதியம் கிடைக்கிறது என்பது குறித்த தகவல்களைக் கொண்ட 2022-23ஆம் நிதியாண்டிற்கான டீம்லீஸ் சர்வீசஸ் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி மும்பை, பெங்களூர், சென்னை, டெல்லி நகரங்களில் இந்தாண்டு அதிக ஊதியம் அளித்துள்ளனர்.
அனைத்து நகரங்களையும் விடப் பெங்களூரு தான் டாப் இடத்தில் உள்ளது. அங்கே கடந்த ஆண்டை காட்டிலும் சராசரியாக 7.79 சதவீதம் ஊதியம் உயர்ந்துள்ளது. அதேபோல மும்பை, சென்னை, டெல்லி நகரங்களிலும் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல துறை ரீதியாகப் பார்க்கும் போது, வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு ஆகிய துறைகளில் சம்பளம் கணிசமாகக் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக இந்த துறையில் ஊதியம் கணிசமாக உயர்ந்த நிலையில், இப்போது குறைந்துள்ளது.

2023ஆம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு துறைகளில் 3.20 சதவீதம் முதல் 10.19 சதவீதம் வரை ஊதிய உயர்ந்து இருந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்தே உள்ளதாகக் கூறப்படுகிறது. நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்களின் ஊதியம் குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் மயமாகி வருவதால் அது சார்ந்த சேல்ஸ் மற்றும் ஐடி வேலைகள் அதிகரிக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
சிறந்த எதிர்காலம்:
2023ஆம் ஆண்டில் அதிக சம்பளம் தரும் துறைகளில் ஏறக்குறைய பாதி துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகவும் இது இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதையே காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெங்களூரில் தொலைத்தொடர்புத் துறையில் ரிலேஷன்ஷிப் மேனேஜர் வேலை 10.19 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அதிக சம்பளம் தரும் வேலைகளில் ஒன்றாகும்.
அதேபோல மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் பணிபுரிவோரின் ஊதியமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த துறையில் 9.3 சதவீதம் ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. சிலருக்கு அதிகபட்சமாக 10.19 சதவீத உயர்வு கூட கிடைத்துள்ளதாம். இருப்பினும், இது கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு உடன் ஒப்பிடுகையில் சம்பளம் குறைந்தாலும் கூட ஐந்து ஆண்டுகளில் சராசரியாகச் சம்பளம் கணிசமாக உயர்ந்தே இருக்கிறது.
குறிப்பாக சுகாதாரத்துறையில் அதிகபட்சமாக 20.46 சதவீதமும், கல்வி துறையில் 51.83 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், hospitality, ஆட்டோமொபைல் மற்றும் அது சார்ந்த தொழில்கள், இ-காமர்ஸ், டெக் ஸ்டார்ட்-அப்கள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற தொழில்களில் சம்பளம் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications