பகத்சிங் நாடகத்திற்கு ஒத்திகை.. தூக்கு கயிறு இறுக்கி 7ஆம் வகுப்பு சிறுவன் பலி.. கர்நாடகாவில் சோகம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் பகத் சிங் நாடகத்திற்காக அவர் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தை வீட்டில் தனியாக ஒத்திகை பார்த்த போது கயிறு கழுத்தை இறுக்கியதால் 7ஆம் தேதி வகுப்பு சிறுவன் பலியாகிவிட்டார்.
சித்ரதுர்கா டவுன் கன்டோன்மண்ட் பேராங்கானை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவருக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் இருந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் தேதி வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நாளை சிறுவன் படிக்கும் பள்ளியில் கன்னட ராஜ்யோத்சவா எனும் விழா நடைபெறுகிறது. அதாவது கர்நாடகா உருவான தினத்தை ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடுவதுதான் இந்த விழாவின் நோக்கம் ஆகும்.

பள்ளி மாணவர்கள்
இந்த விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தும். அந்த வகையில் சஞ்சய் கவுடா படிக்கும் பள்ளியிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் சஞ்சய் கவுடா, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் வேடமிட்டு நடிக்க இருந்தார்.

பகத் சிங்
நாடு சுதந்திரம் அடைய பகத் சிங் ஆற்றிய தொண்டுகள், அவர் தூக்கிலிடப்பட்டது உள்ளிட்டவற்றை நடித்து காட்ட சஞ்சய் பல நாட்களாக ஒத்திகை பார்த்து வந்தார். அன்றாடம் வசனங்களை ஒத்தி பார்த்த சஞ்சய் நேற்று முன் தினம் தூக்கிலிடும் காட்சியை ஒத்திகை பார்க்க முயற்சித்தார்.

கருப்பு நிற துணி
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகத்தில் கருப்பு நிற துணியை கட்டி கொண்டு கயிறை கழுத்தில் கட்டி சோஃபாவில் இருந்து குதித்து கொண்டிருந்தார். அப்போது அந்த கயிறு சிறுவனின் கழுத்தை நெரித்துவிட்டது. அப்போது முகத்தில் துணி அணிந்திருந்ததால் சஞ்சயால் எதையும் செய்யமுடியவில்லை. இதனால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

சிறுவன் பலி
பின்னர் சிறிது நேரத்தில் அவருடைய பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்த போது சஞ்சய் கவுடா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பரங்கி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பகத் சிங் குறித்த நாடகத்தின் ஒத்திகையின் போது தூக்கு கயிறு இறுக்கியதில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications