8.90 லட்சம் மரத்தை வெட்ட முடிவு.. மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
பெங்களூர்: தமிழகத்தின் கடும் எதிர்ப்புக்கு நடுவே கர்நாடகா மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையின்படி 8.90 லட்சம் மரங்களை வெட்ட கர்நாடகா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த மேகதாது என்ற இடம் தமிழகத்தில் இருந்து சுமார் 4-5 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் கனகப்புரா அருகே அமைந்துள்ளது.

இங்கு மொத்தம் 67 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் வகையில் இந்த மேகதாது அணை திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக எல்லையில் அணை கட்டுவதால் நமக்கான தண்ணீர் உரிய முறையில் கிடைக்காது என்பதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. இருப்பினும் கர்நாடகாவோ அதை கேட்காமல் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது.
கர்நாடக அரசு ஏற்கனவே மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதற்கான தனி அலுவலகம், அதிகாரிகள் குழு ஆகியவற்றை நியமித்துவிட்டது. இந்த குழுவினர் தங்களுக்கான பணிகளை செய்து வருகிறார்கள். முன்னதாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) மத்திய அரசுக்கு, கர்நாடகா அரசு அனுப்பியது. அதில் ரூ.9 ஆயிரம் கோடியில் மேகதாது அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணையின் பிரதான நோக்கம் என்பது பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதும் தான் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. சில தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகள் இருப்பதாகவும், அதை திருத்தி மீண்டும் திட்ட அறிக்கையை அனுப்புமாறும் கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
இதையடுத்து திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் கர்நாடகா ஈடுபட்டது. மேகதாது அணை காவிரி வனவிலங்கு சரணாலய பகுதிக்குள் வருகிறது. தொழில்நுட்ப ரீதியான ஆய்வு மற்றும் மரங்கள் கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றுக்கு கர்நாடகா வன உயிரினங்கள் வாரியம் அனுமதி வழங்கியது. பணிகள் தீவிரமானது. இந்த நிலையில் தான் கர்நாடக அரசு திருத்தப்பட்ட மேகதாது திட்ட அறிக்கையை மீண்டும் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மேகதாது திட்டத்தால் 12 ஆயிரத்து 500 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும். மொத்தம் 8.90 லட்சம் மரங்கள் வெட்டி அகற்றப்படும். இதில் 7 லட்சம் மரங்கள் சிறியவை. 1 லட்சம் மரங்கள் பெரிய வகையை சேர்ந்தவையாகும். இந்த வனப்பகுதிக்கு மாற்றாக கர்நாடகாவின் தட்சிண கன்னடா, சிவமொக்கா உள்ளிட்ட சில பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு ஒதுக்கப்படும்.இந்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்தின் மூலம் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 4.75 டி.எம்.சி. நீர் பயன்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும்,
இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள இன்னும் பிற முழு விவரங்கள் வெளியாகவில்லை. மத்திய அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு (2027) ஆகஸ்டு மாதத்துக்குள் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
