பாரதமாதாவின் கையில் காவிக்கொடி! இன்று பல்கலையில் பூஜை! ஏபிவிபியால் மீண்டும் கர்நாடகத்தில் சர்ச்சை
பெங்களூர்: கர்நாடகத்தில் உள்ள மங்களூர் பல்கலைக்கழகத்தில் பாரதமாதாவின் கையில் காவிகொடி ஏந்தி இருக்கும் போஸ்டர்கள் ஏபிவிபி சார்பில் ஒட்டப்பட்டுள்ளதோடு இன்று பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பூஜை செய்யப்பட உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூர் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஏபிவிபி அமைப்பு சார்பில் ஆகஸ்ட் 11ல்(அதாவது இன்று) தேசப்பற்றை ஊக்கப்படுத்தும் வகையில் ‛பாரதமாதா' பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்பான போஸ்டர் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாரதமாதா கையில் காவிக்கொடி
இந்த போஸ்டரில் அகண்ட இந்தியா வரைபடத்துக்கு முன்பு பாரதமாதா நிற்கிறார். வழக்கமாக பாரத மாதா கையில் தேசியக்கொடி இருக்கும். ஆனால் இந்த போஸ்டரில் பாரதமாதாவின் கையில் காவிக்கொடி உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு பாரதமாதாவுக்கு பூஜை செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

பூஜைக்கும் எதிர்ப்பு
அதாவது பாரதமாதாவின் கையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி கொடுத்து இருப்பது விவாதமாகி உள்ளது. மேலும் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில் பல்கலைக்கழகத்தில் இந்து முறைப்படி பூஜை நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிஎப்ஐ-எஸ்டிபிஐ விமர்சனம்
இதுதொடர்பாக சிஎப்ஐ (கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா) தட்சிண கன்னடா மாவட்ட தலைவர் தாஜூதீன் கூறுகையில், ‛‛பாரத மாதாவுக்கு தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி வைத்திருக்கும் போஸ்டர் கண்டிக்கத்தக்கது. மங்களூர் பல்கலைக்கழகத்தில் இந்து கலாசாரப்படி பாரத மாதா என்ற பெயரில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அரசு கல்லூரியில் காவிக்கொடி கொண்டாட்டத்தை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் கல்லூரிகள் வழிபாட்டுத் தலங்களா?. ஹர்கர் திரங்கா என்ற பெயரில் கல்லூரியில் தேசியக்கொடி ஏற்றுங்கள். ஆனால் பாரதமாதாவின் பெருமையை கூறுவதாக பூஜைகள் செய்ய வேண்டுமா? என்பதை யோசிக்க வேண்டும்'' என கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி எஸ்டிபிஐ கர்நாடக மாநில ஊடக பொறுப்பாளர் ரியாஸ் கடம்பு கூறுகையில், ‛‛ கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் அணிய அனுமதியில்லை என்றால் எப்படி பூஜைகளுக்கு அனுமதி கிடைக்கும்?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏபிவிபி விளக்கம்
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ஏபிவிபி மறுத்துள்ளது. ஏபிவிபி மங்களூரு நகர செயலர் மணிகண்ட கலசா கூறுகையில், ‛‛இந்த கொண்டாட்டத்தின்போது பாரத மாதாவின் புகைப்படத்திற்கு மாணவர்கள் மலர்தூவுவார்கள். 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி ஹர்கர் திரங்கா விழிப்புணர்வையொட்டி தேசப்பற்றை ஊக்கப்படுத்தும் வகையில் பாரதமாதாவுக்கு மாணவர்கள் பூஜை செய்ய உள்ளனர். இதில் வேறு நோக்கம் இல்லை'' என்றார்.

பல்கலைக்கழக மாணவர் சங்கம்
இதற்கிடையே நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து மங்களூர் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் தீரஜ் சபாலிகா கூறுகையில், ‛‛இந்த நிகழ்வு 2014 முதல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை பூஜை நடத்த பல்கலைக்கழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார்'' என்றார்.












Click it and Unblock the Notifications