மின் நெருக்கடி.. சவாலை சந்திக்கும் கர்நாடகா! களத்தில் இறங்கிய தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி
பெங்களூர்: கர்நாடகா கடுமையான மின் நெருக்கடியை எதிர்கொள்ளும் சவாலான நேரத்தில், மின் உற்பத்தி துறையில் முக்கிய பொறுப்பை மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திர சோழன் ஐஏஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். மின் பொறியாளர் பட்டம் வென்ற இவர், அதே துறையில் முக்கிய பொறுப்பை ஏற்று இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ராஜேந்திர சோழன் ஐஏஎஸ், கர்நாடகா கேடர் ஐஏஸ் அதிகாரி ஆவார்.
கர்நாடக அரசு, மின் தேவை அதிகரிப்பு, நீர்மின் உற்பத்தி சரிவு, அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவு என மின்சாரத் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் சூழலில், மாநிலத்தின் மின் உற்பத்தியை நிலைநிறுத்துவதற்கான முக்கிய நிர்வாகப் பொறுப்பை ஏற்று இருக்கிறார் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பி. ராஜேந்திர சோழன். மின் பொறியாளரான இவர், தற்போது கர்நாடக மின் உற்பத்திக் கழகத்தின் (KPCL) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

மதுரை டூ கர்நாடகா
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சோழன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் மின் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலப் பிரிவில் இணைந்தார். ஹாவேரியில் உதவி ஆட்சியர், கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைமைச் செயல் அதிகாரி, யாதகிரி மற்றும் தார்வாட் மாவட்டங்களில் ஆட்சியர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஹூப்ளி மின் விநியோக நிறுவனம் (HESCOM), பெங்களூர் மின் விநியோக நிறுவனம் (BESCOM) ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். குறிப்பாக, பெங்களூர் மின் விநியோக நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் மின் கட்டமைப்பு மேம்பாடு, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகள், மின் விநியோக நிர்வாகம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். பெங்களூர் மாநகராட்சியின் சிறப்பு ஆணையர், பெங்களூர் ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
மின் நெருக்கடியைச் சமாளிக்கும் முக்கியப் பொறுப்பு
கர்நாடகத்தில் போதிய மழையின்மை காரணமாக நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதால், ராய்ச்சூர், பல்லாரி, எர்மரஸ் ஆகிய அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையங்களை நிர்வகிக்கும் கர்நாடக மின் உற்பத்திக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் ராஜேந்திர சோழன் இருப்பதால், நிலக்கரி விநியோகம், மின் நிலையங்களின் செயல்பாடு, உற்பத்தித் திறன் ஆகியவை அவரது தற்போதைய நிர்வாகப் பணிகளில் முக்கிய இடம் பெற்றுள்ளன.
கடந்த ஜூலை மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அதிகாரிகள் குழுவுடன் நேரில் சென்ற ராஜேந்திர சோழன், கர்நாடக அனல் மின் நிலையங்களுக்கு கூடுதல் நிலக்கரி கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, கர்நாடகத்துக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து கூடுதலாக 85 லட்சம் டன் நிலக்கரி ஒதுக்கீடு பெறப்பட்டதாக செப்டம்பர் மாத இறுதியில் செய்திகள் வெளியாகின. மாநிலத்தின் முக்கிய அனல் மின் நிலையங்களில் தினமும் சுமார் 10 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின் உற்பத்தி முதல் மின் விநியோகம் வரை..
பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் நிர்வாகப் பொறுப்புகளை வகிப்பது வழக்கம். ஆனால், மின் பொறியியல் கல்விப் பின்னணியுடன் மின் விநியோக நிறுவனங்களை நிர்வகித்த அனுபவமும், தற்போது மின் உற்பத்தி நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பும் ராஜேந்திர சோழனுக்கு அமைந்துள்ளது.
மின் உற்பத்தி, மின் விநியோகம், நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்திருப்பது அவரது நிர்வாகப் பின்னணியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரின் செயலராகவும் ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சிவகுமார் துணை முதல்வராக இருந்தபோதும் அவருடைய செயலராகப் பணியாற்றினார்.
அடுத்தகட்டச் சவால்கள்
அனல் மின் நிலையங்களுக்குத் தடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்வது, மின் உற்பத்தி நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்துவது, பராமரிப்புப் பணிகளைத் திட்டமிடுவது ஆகியவை கர்நாடக மின் உற்பத்திக் கழகத்தின் தற்போதைய முக்கியத் தேவைகளாக உள்ளன. அதேநேரத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரச் சேமிப்புத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு எதிர்கால மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
மின்சார நெருக்கடியைச் சமாளிப்பது மின் உற்பத்திக் கழகத்தின் பணி மட்டுமல்ல. மாநில எரிசக்தித் துறை, மின் பரிமாற்றக் கழகம், மின் விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியமாகிறது.
மதுரையில் மின் பொறியியல் படித்த ஒருவர், இன்று அண்டை மாநிலமான கர்நாடகத்தின் மின் உற்பத்தி நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பை வகிப்பது, ராஜேந்திர சோழனின் பணிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க கட்டமாக அமைந்துள்ளது. மின்சாரத் தேவை மற்றும் எரிபொருள் விநியோகம் கடும் சவால்களாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், அவரது நிர்வாக அனுபவம் கர்நாடக மின் உற்பத்தித் துறையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.






Click it and Unblock the Notifications
