கர்நாடகாவுக்கு அடி மேல் அடி.. முதலில் ஆந்திரா, இப்போது தெலுங்கானா.. பெங்களூரில் குறையும் வேலைகள்?
பெங்களூர்: கர்நாடகா, ஆந்திரா இடையே சமீபத்தில் தான் முதலீடுகள் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இரு மாநில அமைச்சர்களும் கூட காட்டமான கருத்துகளை முன்வைத்து வந்தன. இதற்கிடையே ஐடி வேலைகளை உள்ளடக்கிய சர்வீஸ் துறையில் சத்தமே இல்லாமல் கர்நாடகாவை தெலுங்கானா மாநிலம் ஓவர்டேக் செய்துள்ளதாக நிதி ஆயோக் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முதலீடுகள் தொடர்பாக மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்தன. ஆந்திர ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் கர்நாடக ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

தெலுங்கானா
ஆனால், சைட் கேப்பில் சத்தமே இல்லாமல் சர்வீஸ் துறையில் தெலுங்கானா மாநிலம் கர்நாடகாவை முந்தியுள்ளது. தெலங்கானாவில் சுமார் 34.8% பணியாளர்கள் சர்வீஸ் துறையில் வேலை செய்வதாக நிதி ஆயோக் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இந்த எண்ணிக்கை 32.9%ஆக உள்ளது. இது தெலுங்கானாவில் நகர்மயமாக்கல் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. நகர்மயமாக்கலுக்கும் சர்வீஸ் துறை வளர்ச்சிக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
எந்த மாநிலங்கள் டாப்
தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளாவில் தான் சர்வீஸ் துறையில் அதிகபட்சமாக 48.5% வேலைவாய்ப்புகள் உள்ளன. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு 37.9% உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முன்பு கர்நாடகா மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், அப்போது 34.8% உடன் தெலுங்கானா 3வது இடத்தைப் பிடித்துள்ளது. கர்நாடகா (32.9%), மற்றும் ஆந்திரப் பிரதேசம் (31.8%) முறையே 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளன.
தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களில் பல சர்வதேச ஐடி மையங்களாக இருந்தாலும், அவற்றின் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சர்வீஸ் துறையில் (33-34%) உள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது இந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை விட உற்பத்தி வேகமாக அதிகரிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இந்தக் காலத்தில் ஐடி துறையிலேயே அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது என நாம் நினைப்போம். ஆனால், தெலங்கானாவில் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் கல்வித் துறைகளில் தான் 50%க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உலகின் டாப் ஐடி நிறுவனங்கள் உள்ளன. அடுத்த கட்டமாக அங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வாரங்கல் மற்றும் கரீம்நகர் போன்ற 2ம் கட்ட நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஹைதராபாத்திலும் கூட ஐடி துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. மேலும், மாநிலத்தின் போக்குவரத்து நெட்வோர்க்கை மேம்படுத்தவும், ஹைதராபாத்- வாரங்கல் வழித்தடத்தையும் பயன்படுத்தி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அறிவுறுத்துகிறது.
தென் மாநிலங்கள்
தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிக உற்பத்தித் திறன் கொண்ட சர்வீஸ் ஹப்களை உருவாக்கியுள்ளன. ஆனால் பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் குறைந்த சம்பளம் தரும் வேலைகளை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றன. அதாவது மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் பெரும்பாலான தென் மாநிலங்கள் வேலைவாய்ப்பு எண்ணிக்கை மற்றும் ஊதியத்தையும் அதிகமாகக் கொண்டுள்ளன. அதேநேரம் பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் குறைந்த சம்பளம் தரும் வேலைகளே அதிகம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications