பெங்களூரில் சீட்டுக்கட்டு போல சரிந்த அடுக்கு மாடி கட்டிடம்! எப்படி சரிந்து விழுது பாருங்க.. வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் பெங்களூரில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 6 மாடி கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17 பேர் வரை சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூரின் வடக்கு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்ததது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. பிரதான சாலைகளில் கூட தண்ணீர் குளம் போல கிடந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்: பெங்களூரில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கம்மஹனஹள்ளி அருகே கட்டுமான பணி நடைபெற்று வந்த 6 மாடி அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் 20 தொழிலாளர்கள் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கனமழைக்கு நடுவிலும் கட்டுமான பணி நடைபெற்று வந்ததாகவும் அப்போதுதான் இந்த துயர சம்பவம் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

3 பேர் பலி: 17 தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒவ்வொருவராக மீட்கும் பணி நடந்து வருகிறது. இதில், முதலில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மேலும் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிசிடிவி வீடியோ காட்சி: சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர் முழு வீச்சில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு பெங்களூரில் உள்ள பாபுசபால்யாவில் தான் இந்த 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
#BREAKING
— Nabila Jamal (@nabilajamal_) October 22, 2024
Under-construction building collapses in Bengaluru killing 3
15 workers still trapped under debris.
Rescue teams on site, search on
Schools declared holiday tomorrow (Oct 23) due to unprecedented rains in Bengaluru
👇🏽Video shows the multi-storeyed building in… pic.twitter.com/w5kG08raAI
இந்த நிலையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் 6 மாடி கட்டிடத்தின் ஒருபகுதி முழுவதுமாக பெயர்ந்து அப்படியே மறுபுறம் விழுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் மளமளவென சீட்டுக்கட்டுபோல் கட்டிடம் சரிந்து விழுந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளனர்.

பெங்களூரில் பள்ளிகளுக்கு விடுமுறை: பெங்களூரில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ள மீட்பு பணிகள், மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 1533 என்ற இலவச எண்ணில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications