முருகனின் அறுபடை வீடுகளை ஒருங்கிணைத்து புதிய ஆன்மீக சுற்றுலா திட்டம்-மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
பெங்களூரு: முருகனின் அறுபடை வீடுகளை ஒருங்கிணைத்து புதிய சுற்றுலா திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களின் மாநாடு, பெங்களூருவில் மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வட கிழக்கு பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: பண்டைக் காலத்திலிருந்தே இந்தியா சுற்றுலாத்தலங்களை அதிகம் கொண்ட நாடாக திகழ்கிறது. அதே போன்று தமிழகமும், இயற்கை எழில் மிக்க மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், கோரமண்டல் கடற்கரை மற்றும் அரிய தாவரங்கள் விலங்கினங்களைக் கொண்ட வனப்பகுதிகளும் பெரும் அளவில் உள்ளன. இவை தவிர, வரலாற்று மற்றும் ஆன்மீக சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களும் ஏராளம் உள்ளன.
தமிழ்நாட்டில் கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம், செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சை அரண்மனை, துறைமுக நகரான பூம்புகார், திருச்சி மலைக்கோட்டை, திண்டுக்கல் மலைக்கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் மஹால் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் தமிழகத்தில் ஏராளம் உள்ளன. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலைவாசஸ்தலங்களும் தமிழகத்தில் சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களாக உள்ளன. காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மதுரை, சிதம்பரம் போன்ற ஆன்மீக ஸ்தலங்களும் அதிகம் உள்ளன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்கள் உள்ளன. இந்த ஆன்மீக தலங்களுக்கு வெற்றி வேல், வீரவேல் என்ற கோஷத்துடன் பக்தர்கள் குவிகின்றனர். இந்த முருகனின் ஆறுபடை வீடுகளை இணைத்து ஆன்மீக யாத்திரை சுற்றுலா திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். பாரத மாதாவின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகிகள் தியாகம் செய்துள்ளது தமிழ்நாடு. மகாகவி சுப்பிரமணி பாரதியார், திருப்பூர் குமரன், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளிட்டோர் இந்த தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவ்வாறு எல். முருகன் பேசினார்.












Click it and Unblock the Notifications