பெங்களூரின் டாப் 5 கோடீஸ்வரர்கள் யார் யார்? இன்போசிஸ் நாராயண மூர்த்திக்கு எந்த இடம்? இதோ லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் டாப் 5 பெரும் கோடீஸ்வரர்கள் யார் யார்? என்ற விபரம் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கடைசி இடத்தில் உள்ளார். இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:
இந்தியாவில் சிலிக்கான் சிட்டியாக பெங்களூர் உள்ளது. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் முன்னணி ஐடி நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஆண்டுதோறும் பெங்களூரில் ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உதயமாகி வருகின்றன.

அதோடு கர்நாடகா பொருளாதாரத்தில் பெங்களூர் நகர் மட்டுமே 43.65 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது. குறிப்பாக மென்பொருள் துறை சார்ந்த ஏற்றுமதியில் 98 சதவீதம் பெங்களூரையே சார்ந்துள்ளது. இதனால் பெங்களூரில் பெரும் கோடீஸ்வரர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பெங்களூரில் வசிக்கும் தொழிலதிபர்களில் டாப் 5 பணக்காரர்கள் யார் என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக Hurun India Rich List 2024-ன் விபரங்களின்படி பெங்களூரில் டாப் பணக்காரராக முதலிடத்தில் அஜிம் பிரேம்ஜி உள்ளார். இவர் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 90 ஆயிரத்து 700 கோடியாக உள்ளது.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் இர்பான் ரசாக். இவர் பிரஸ்டேஜ் எஸ்டேட் புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார். இர்பான் ரசாக்கின் சொத்து மதிப்பு என்பது ரூ.43,600 கோடியாக உள்ளது. இதில் 3வது இடத்தில் நிதின் காமத் உள்ளார். ஜெரோடா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள நிதின் காமத்தின் சொத்து மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
அதேபோல் இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் இருப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவரது சொத்து மதிப்பு என்பது ரூ.38,500 கோடியாக உள்ளது. இந்த பட்டியலில் 5வது இடத்தில் இன்போசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி உள்ளார். இவரது சொத்து மதிப்பு என்பது ரூ.36,600 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications