Uber ‛புக்' செய்த பெங்களூர் ஐடி ஊழியர்.. டிரைவராக வந்தது டீம் லீடு!
பெங்களூர்: பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவர் தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல ‛உபர்' வாடகை காரை பதிவு செய்தார். அந்த கார் அலுவலகத்துக்கு வந்தபோது அதில் அவரது ‛டீம் லீட்' டிரைவராக இருந்தார். இதனை பார்த்து அந்த பெண் ஊழியர் இன்பஅதிர்ச்சி அடைந்த நிலையில் ‛டீம் லீட்' எதற்காக உபர் காரை ஓட்டும் டிரைவராக மாறினார் என்பதன் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர்.. நம் நாட்டின் சிலிக்கான் வேலி. ஏராளமான ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் உள்ளது. கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரில் தங்கி ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஐடி நிறுவனங்களை எடுத்து கொண்டால் டீம் லீட் என்பவர்கள் அனுபவசாலிகளாக இருப்பார்கள். ஒரு சில டீம் லீட்கள் ஊழியர்களுடன் சகஜமாகவும், ஜாலியாகவும் பேசுவார்கள். ஆனால் ஒரு சில டீம் லீட்டுகள் குறித்த காலத்துக்குள் டார்கெட்டை முடிக்க விரட்டி வேலை வாங்குவார்கள்.
இதனால் ஐடி நிறுவனத்தில் ஒரு தரப்பினருக்கு டீம் லீட் ‛பேவரைட் பர்சனாகவும்'', இன்னொரு தரப்பினருக்கு டீம் லீட் என்பவர் பிடிக்காத நபராகவும் இருப்பார்கள். இப்போது நாம் ஒரு விஷயத்தை கற்பனை செய்து கொள்வோம். நீங்கள் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். அங்கு டீம் லீடாக ஒருவர் இருக்கிறார். பார்க்க சுமார்ட்டாக, மடிப்பு இல்லாத சட்டை, பேண்ட் அணிந்து கம்பீரமாக வலம் வருகிறார். தனது டீமில் உள்ளவர்களிடம் குறித்த காலத்தில் பணியை முடிக்க சில நேரங்களில் அன்பு, சில நேரங்களில் அதட்டலோடு கட்டளையிடும் ஒருவராக நினைவுப்படுத்தி கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் அலுவலக பணியை முடித்துவிட்டு வீட்டுக்குள் புறப்படுகிறீர்கள். அதற்காக உபர் காரை புக் செய்து, கார் வந்ததும் அதில் ஏறுகிறீர்கள். அப்போது நிறுவனத்தில் டீம் லீடாக வலம் வந்தவர் அதன் டிரைவராக இருக்கிறார் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு ‛டீம் லீட்' இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார். பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பணி முடிந்ததும் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல ‛ஊபர்' வாடகை கார் ‛புக்' செய்தார். வாடகை கார் வந்து நின்றது. பெண் ஊழியர் கதவை திறந்து பார்த்தபோது அவர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏனென்றால் காரின் டிரைவர் இருக்கையில் இருந்தது அவரது ‛டீம் லீட்'.
பார்த்ததுமே ‛‛அய்யோ சார் நீங்க எங்க இங்க'' என அவர் கேட்க காரில் ஏறுங்க சொல்றேன் என்று டீம் லீட் கூறினார். டீம் லீட் கார் ஓட்டி பெண் ஊழியர் தங்கியிருக்கும் இடத்துக்கு பத்திரமாக அழைத்து சென்றார். அதன்பிறகு வெளியேறினார். இதற்கிடையே தான் அந்த பெண் ஊழியர் தனது தோழியுடன் நடந்த சம்பவத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.
Peak Bangalore moment? pic.twitter.com/9lnPOz8O1r
— purpleready (@epicnephrin_e) May 22, 2025
அதில் அந்த பெண் ஊழியர் தனது தோழியிடம், ‛‛ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது தெரியுமா?.. நான் உபர் காரை புக் செய்தேன். என்னை பிக்அப் வந்தது எனது அலுவலகத்தில் டீம் லீட்'' என்று தெரிவித்துள்ளார். அதோடு அவர், ‛‛இந்த வேலையை நான் வெறுமனே பொழுதுபோக்கிற்காக செய்யவில்லை. அலுவலக பணியில் ஏற்பட்ட சலிப்பை தவிர்க்க இந்த பணியை செய்கிறேன்'' என்று கூறியுள்ளார். பெண் ஊழியர் கூறிய இந்த வாட்ஸ்அப் சாட்டின் ஸ்கிரீன்ஷாட் தற்போது எக்ஸ் பக்கத்தில் பரவி வருகிறது.
இந்த பதிவுக்கு பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஒருவர், ‛‛நான் அமெரிக்காவில் பணிபுரிந்தபோது தலைமை நிர்வாக அதிகாரி எங்களை அவரது வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்றபோது ஹோட்டலில் சர்வராக வேலை செய்ததாக தெரிவித்தார். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவில் இப்போது நடந்து இருக்கும் சம்பவம் உண்மை என்றால் அவர் கடின உழைப்பாளி. அவர் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.
அதேவேளையில் இன்னொருவர், ‛‛யாரும் வேடிக்கையாக கமெண்ட் செய்ய வேண்டும். அநேகமாக அவருக்கு பணப்பிரச்சனை இருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார். தற்போது பணக்கஷ்டத்தில் பலரும் 2 வேலைகளை ஒரே நாளில் செய்கின்றனர். அதனை வைத்து அந்த நபர் கருத்து தெரிவித்து இருக்கிறார். மற்றொருவரோ ‛‛ஒரு டீம் லீடாக இருந்து கொண்டு அவருக்கு எப்படி உபர் ஓட்டுவதற்கு நேரம் கிடைக்கிறது?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார். பல ஐடி நிறுவனங்களில் பணியாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஊழியர்களுக்கே அப்படி என்றால் டீம் லீட் மட்டும் எப்படி உபர் கார் ஓட்டுகிறார்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications