தங்கம் விலை தொடர்ந்து உயருது ரைட்.. ஆனா அதுவே குறையவும் வாய்ப்பு இருக்கு! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இது வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை இப்போது வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் 10 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ரூ.400க்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போதுள்ள புவிசார் அரசியல் சூழலை வைத்துப் பார்த்தால் தங்கம் விலை குறைவது போலத் தெரியவில்லை.

நேற்றைய தினம் (ஏப்ரல் 19) சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ 71,560க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.8945க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை
இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்குக் காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இது வரும் காலத்தில் எந்தளவுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. தங்கம் விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் சர்வதேச காரணங்கள் ஆகியவை குறித்து விளக்கியுள்ளார். தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை வாங்க முடியாமல் மக்கள் சிரமப்படும் நிலையில், ஆனந்த் சீனிவாசன் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி இன்னும் அமலுக்கே வரவில்லை. ஆனால், அதற்குள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நகைகள் குறைந்துவிட்டது. குறிப்பாக வைர ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சூரத் என்ற ஒரு ஊர் இருக்கிறது. வைரத்தைப் பட்டை தீட்டுவதே அங்குப் பிரதானத் தொழில். அந்த ஊர் இப்போது கிட்டத்தட்ட ஆளே இல்லாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்கள்.
வைரம் மதிப்பு சரியுது
வைரத்தின் மதிப்பு சரிந்ததே இதற்குப் பிரதானக் காரணம். வைரத்தின் விலை சரிவதால் அதன் மதிப்பு குறைகிறது.. அதன் மதிப்பு குறைவதால் லாபமும் குறைகிறது. ஏனென்றால் இப்போது இயற்கையாகக் கிடைக்கும் வைரத்திற்கும் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்திற்கும் வேறுபாடு சொல்ல முடியாத அளவுக்குப் போய்விட்டது. இதனால் தங்கத்தை போல அதிலும் லாபம் வரும் என்று இருந்த நம்பிக்கை போய்விட்டது. இதுவே வைரத்தின் மதிப்பு சரிய முக்கிய காரணமாக இருக்கிறது.
தங்கம் விலை பறக்குது
தங்கம் விலை ரூ.8900ஐ தாண்டிவிட்டது. நாம் 3 சதவிகித வரி மற்றும் ஸ்டாம்பிங் சார்ஜ்ஜை போட்டாலே ரூ.9600ஐ வந்துவிடும். நகையாக வாங்க வேண்டும் என்றால் நிச்சயம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் தான் கொடுக்க வேண்டும். இதை நிலை தொடர்ந்தால் ஒரு அவுன்ஸ் 3600 டாலர் (அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.9800) ஈஸியாக போய்விடும். அடுத்த 4000 டாலர் டார்கெட்டாக இருக்கும் (ஒரு கிராம் ரூ.11 ஆயிரம்)
அங்கிருந்து ரேட் குறைந்தாலும் கூட பெரியளவில் இருக்காது. அதற்கும் வாய்ப்பு இருக்கு என உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே, குறையும் வரை காத்திருப்பதில் அர்த்தமில்லை. மேலும், தங்கம் விலை கட்டுப்படுத்துவதும் குறைவு" என்றார்.
புவிசார் அரசியல்
அதேபோல தனது மற்றொரு வீடியோவில், "சீனா இனிமேல் டாலரை வாங்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் தங்கத்தை வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த புவிசார் அரசியல் பிரச்சினை இன்னும் முடியவில்லை. ரஷ்யாவின் பணத்தை பைடன் முடக்கியதில் தான் இந்த புவிசார் அரசியல் பஞ்சாயத்து எல்லாம் தொடங்கியது. முடக்கியதை அவர்கள் எடுக்கவும் இல்லை. ரஷ்யாவுக்கு இன்னும் அந்தப் பணம் போகவில்லை. பிறகு எப்படி புவிசார் அரசியல் சிக்கல் முடிந்ததாகக் கருத முடியும்.
குறையலாம் ஆன வாய்ப்பு கம்மி
தங்கம் விலை அதிகபட்சம் ரூ.100 முதல் ரூ.300 வரை தொடங்கலாம். ஆனால், அது பெரிய விஷயமில்லை. தங்கம் விலை ரூ.8500 போகும் என நான் சொன்னது நடந்துவிட்டது. இங்கிருந்து மேலும் 15% உயரும். அதாவது ரூ.1500 உயர்ந்து ரூ.10 ஆயிரம் நிச்சயம் போகும். ஆனால், அது மூன்று மாதத்தில் நடக்கிறதா இல்லை. 18 மாதங்களில் வருகிறதா என்பதைச் சொல்ல முடியாது. மேலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்ல முடியாது. அது இடையில் ரூ.8500 வரை கூட குறையலாம். ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications