புத்தாண்டு வந்தாச்சு.. 2025ல் தங்கம் விலை அதிகரிக்குமா? இல்லை குறையுமா! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: ஒரு வழியாக 2025 புத்தாண்டு வந்துவிட்டது. கடந்த 2024ல் அதிகம் லாபம் கொடுத்ததாகத் தங்கம் இருந்த நிலையில், இந்தாண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதில் பலருக்கும் கேள்வி இருக்கிறது. இந்த முறையாவது நாம் வாங்கக்கூடிய அளவுக்குத் தங்கம் விலை குறையுமா.. இல்லை தொடர்ந்து எகிறுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. தங்கம் இப்படி ஏன் அதிகரித்து வருகிறது! இந்தாண்டு அது எப்படி இருக்கும் என்பதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார்.
கடந்தாண்டு (2024) அதிக அளவுக்கு லாபம் கொடுத்த ஒன்றாகத் தங்கம் இருந்தது. கடந்த ஜன. மாதம் ஒரு கிராம் 5870 ரூபாய் என்ற ரேஞ்சில் இருந்த சூழலில், 2024ல் கடைசி நாளான நேற்று ரூ.7,110க்கு விற்பனையானது.

ஆனந்த் சீனிவாசன்:
இதில் இடையில் மத்திய அரசும் கூட இறக்குமதி வரியைக் குறைத்திருந்தது. அதுவும் இல்லாமல் போய் இருந்தால் தங்கம் விலை எங்கோ உச்சம் தொட்டு இருக்கும். 2024 தான் இப்படிப் போய்விட்டது. சரி, 2025ல் ஆவது தங்கம் விலை கொஞ்சமாவது குறையுமா.. அதை வாங்க வாய்ப்பு அமையுமா என்று பலருக்கும் கேள்வி வருகிறது. குறிப்பாகத் தங்கம் விலை ஏன் இப்படி உயர்ந்து கொண்டே போகிறது என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும். இதற்கான பதிலைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார்.
தங்கம் விலை:
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "பொதுவாக அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் போது தங்கம் விலை அதிகரிக்கவே வேண்டும். ஆனால், இந்த முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போது கூடவே அமெரிக்க மத்திய வங்கி ஆளுநர் இன்னொரு விஷயத்தையும் சொன்னார். அதாவது 2025ல் இரண்டே இரண்டு முறை மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைக்கப் போவதாகக் கூறியிருந்தார். அவர் 2025ல் 5 முறை வட்டி விகிதத்தைக் குறைப்பேன் எனச் சொல்லி இருந்தால் தங்கம் விலை ஏறி இருக்கும். நாம் ஆக்ஷனை மட்டும் பார்க்கக்கூடாது. கூடவே அவர் என்ன சொன்னார் என்பதையும் பார்க்க வேண்டும்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களில் என்ன முடிவெடுக்கிறதோ.. அதைப் பொறுத்தே உலக மார்கெட் மாறும். அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடையும் போது இந்திய ரூபாய் மதிப்பு சரியும். இந்திய பங்குச்சந்தைகளுக்கு அது நல்ல செய்தி இல்லை. நாம் வெறுமன கடந்த 3 வருடப் பங்குச்சந்தையைப் பார்த்துவிட்டு சூப்பராக லாபம் வந்து இருக்கு எனச் சொல்வோம்.
ரூபாய் மதிப்பு:
ஆனால், 3 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு எந்தளவுக்குச் சரிந்துள்ளது என்பதைப் பாருங்கள்.. 3 ஆண்டுகளில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 71ல் இருந்து 85க்கு போய் இருக்கிறது. அதாவது 30% சரிந்துள்ளது. அப்படிப் பார்த்தால் டாலர் மதிப்பில் நமது முதலீடு ஏற்கனவே 30% காலி. எனவே, நாம் நமது லாபத்தை எப்போதும் டாலரில் தான் பார்க்க வேண்டும்.
எனவே, இதை வைத்துப் பார்க்கும் போது தங்கமே சிறப்பாக இருந்துள்ளது. கிட்டதட்ட இரட்டிப்பாகி இருக்கிறது என்றே சொல்லலாம். கடந்த 3 ஆண்டுகளில் அதிக லாபம் கொடுத்த ஒன்றாகத் தங்கம் இருக்கிறது. தொடர்ச்சியாகப் பங்குச்சந்தையை விடத் தங்கம் நமக்கு அதிக லாபம் கொடுத்துள்ளது. இப்படி சர்வதேச அளவில் என்ன நடக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்" என்றார்.
2025ல் எப்படி இருக்கும்:
முன்னதாக அவர் தனது மற்றொரு வீடியோவில், 2025ம் ஆண்டு தங்கம் விலை உயரும் என்றாலும் கடந்தாண்டு (2024) உயர்ந்த அளவுக்கு உயராது எனக் குறிப்பிட்டு இருந்தார். அதேநேரம் அடுத்தாண்டு (2026) உயர்ந்து உச்சம் தொடும் எனக் குறிப்பிட்டு இருந்தார். தங்கம் வைத்திருப்போர் அச்சப்பட தேவையில்லை என்றும் இதில் எளிதாக லாபம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications