மதுரையில் தான் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! பிடிஆர் அழைப்பை ஏற்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சண்டிகர்: ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 வது கூட்டம் சண்டிகரில் துவங்கி நடந்தது. நேற்று, இன்று என 2 நாட்கள் நடந்த கூட்டம் முடிவடைந்துள்ளது.
இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

வரி உயர்த்த ஒப்புதல்?
இந்த கூட்டத்தில் பல்வேறுமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 2 ஆம் நாளான இன்று மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள், சூரியசக்தி ஹீட்டர், பேனா மை, கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எவ்வளவு வரி உயர்வு?
அதன்படி எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேனா மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜிஎஸ்டி வரி 12ல் இருந்து 18 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீதாராமன் பேட்டி
இந்நிலையில் கூட்டத்தின் முடிவில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
4 அமைச்சர்கள் குழு அறிக்கை மீது ஜிஎஸ்டி குழு சில முடிவுகளை எடுத்துள்ளது. வரி சீரமைப்பு குழு, கேசினோ, குதிரைப்பந்தயம், லாட்டரி, ஆன்லைன் கேம் ஆகியவற்றை ஆராயும் அமைச்சர்குழு, ஐடி வரி, விலைஉயர் உலோகம் ஆகியவை பற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை சீரமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் குழு இன்னும் காலஅவகாசம் கேட்டுள்ளனர்.

மதுரையில் அடுத்த கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்டில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் முதல்வாரம் தமிழகத்தின் மதுரையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம் மீதான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்படும்'' என்றார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்த நிலையில் அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications