15 லட்சம் கடன்; வருமானத்தை வயநாடுக்கு வாரி தந்த சென்னை ஆட்டோ டிரைவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் ராஜீ என்பவர் வாரத்தில் இரண்டு நாட்கள் கிடைக்கும் வருமானத்தைக் கேரள மாநில முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்.

கேரளா மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் சில கிராமங்களே மண்ணுக்குள் புதைந்துபோய்விட்டன. இதுவரை சுமார் 400க்கும் அதிகமான உயிர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளன. மேலும் 200க்கும் மேற்பட்டோர் நிலை என்னவானது என்பதே தெரியவில்லை. வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சேரி மட்டம் ஆகிய கிராமங்கள் முற்றிலும் சிதைந்து போய்விட்டன.

Wayanad Kerala

இந்த இயற்கைப் பேரழிவுகளை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று பார்வையிட வருகிறார். டெல்லியிலிருந்து கண்ணூர் விமான நிலையம் வந்தடைய உள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு செல்ல இருக்கிறார். பின்னர் மேப்பாடி பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடும் பிரதமர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளார்.

வயநாட்டை மீட்பதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் அங்கே தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகம் முழுவதும் இருந்து மக்கள் நிதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வரும் ராஜீ என்ற பெண்மணி, தனது வருமானத்தில் வாரம் இரண்டு நாட்கள் கிடைக்கும் தொகையை கேரள முதல்வர் நிதிக்கு வழங்க இருக்கிறார். அவருக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தனது முயற்சி பற்றி ராஜீ பேசும் போது, "பசி பட்டினி எந்தளவுக்குக் கொடுமையானது என்பதை அனுபவித்தவள் நான். சாதாரண நிலைமையிலிருந்து இன்று நானே வளர்ந்து ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். நான் சென்னை வந்து பல வருடங்களாகிவிட்டன. எனக்கு சொந்த மாநிலம் கேரளா. அது என் தாய் வீடு. தமிழ்நாடு என் புகுந்த வீடு. இன்றைக்குக் கேரள மாநிலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

என்னால் அதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. மனம் வலிக்கிறது. ஆகவே, ஏதேனும் பொருள் உதவி செய்யலாம் என நினைத்தேன். பலரும் வயநாடு உள்ளேயே போக முடியாது. உங்களால் பொருட்களைக் கொண்டு போய் சேர்க்க முடியாது எனச் சொன்னார்கள். அப்போதுதான் கேரள முதல்வர் நிதிக்குப் பணம் வழங்கலாம் என்ற செய்தியைப் படித்தேன்.

உடனே எங்கள் 'இணையும் கைகள் பெண்கள் கல்வி அறக்கட்டளை'யில் சொன்னேன். அவர்களும் உதவுவதாகச் சொன்னார்கள். என் ஆட்டோ கேஸ் சிலிண்டரில் தான் ஓடுகிறது. ஆகவே ஒருநாளைக்கு ஒரு சிலிண்டர் வாங்கி தருவதாக அறக்கட்டளையில் உள்ளவர்கள் சொன்னார்கள். அதை வைத்து தினம் சம்பாதிக்கும் பணத்தை முதல்வர் நிதிக்குக் கொடுக்க உள்ளேன். எனது வருமானத்தையும் சேர்த்து வழங்கப் போகிறேன். இது போக ஆட்டோவில் ஒரு உண்டியல் வைத்துள்ளேன். அதைத் திறக்க முடியாது. வெல்ட் வைத்துவிட்டோம். அதில் பயணிகள் போடும் பணத்தை அப்படியே அரசு நிதியில் சேர்க்க இருக்கிறோம்.

எனது முயற்சியை விஜய் டிவி பாலா தான் தொடங்கி வைத்துள்ளார். அவரே 5 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். எனது கேரள உறவினர் ஒரு 5 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார். வெளிநாட்டிலிருந்து ஒருவர் 7 ஆயிரத்திற்கு செக் அனுப்பினார். முதல் நாளே 14 ஆயிரம் ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இப்படிப் பலரும் உதவ நினைக்கிறார்கள். சரியான இடத்தில் கொடுத்தால் நல்லது என நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கையை என் மீது வைத்து மக்கள் அளித்துள்ளனர். எப்படியும் சில வாரத்திற்கு லட்சக் கணக்கில் நன்கொடையைத் திரட்டி விடுவேன்.

எந்த நாட்டில் நடந்தாலும் அதற்கு நாம் உதவவேண்டும். எனது சொந்த மாநிலம் என்பதால் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக அதிகம் மனம் வலிக்கிறது. நான் ஒன்று பெரிய பணம் உள்ள மனுஷி இல்லை. எனக்கும் கிட்டத்தட்ட 15 லட்சம் கடன் இருக்கிறது. நம் கடனை அடைத்த பிறகுதான் வேறு ஒருவருக்கு உதவு முடியும் என நினைத்தால், வாழ்நாளில் யாருக்குமே உதவவே முடியாது. கிட்டத்தட்ட வயநாடு என்ற ஊரே அழிந்து போய்விட்டது. அதைத் திரும்பக் கொண்டுவர எவ்வளவு பணம் தேவை? எவ்வளவு செலவாகும் என்பதே தெரியாது. அப்படி இருக்கும் போது ஏதோ ஒரு நாளைக்கு நன்கொடை வாங்கி அனுப்பிவிட்டால் போதும் என என்னால் நினைக்க முடியவில்லை. எனவே முதல்வர் பினராயி விஜயன் நிதியை எவ்வளவு நாளைக்கு திறந்து வைத்துள்ளாரோ அதுவரை நான் நிதி திரட்டி அனுப்புவேன்.

என்னைப் பார்த்து இதைப் போலச் சேவை செய்ய வந்தாலே அது மிகப்பெரிய வெற்றிதான். அதை நம்பியே இறங்கினேன். நான் நம்பியதைப் போல ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்னுடன் சேர்ந்துள்ளார். அவர் வாரத்தில் ஒருநாள் வருமானத்தைக் கேரளாவுக்கு வழங்க இருக்கிறார்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+