கண்ணிமைக்கும் நேரத்தில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தை மீட்பு.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!
சோளிங்கர்: சோளிங்கரில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தை கழிவுநீரை குடித்துவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை காப்பாற்ற கால்வாயில் குதித்த போது காயம் ஏற்பட்டதால் தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஆறாவது வார்டு ஒத்தவாடை தெரு பகுதியில் சோளிங்கர் நகராட்சி சார்பில் கால்வாய்களை தூர்வாரும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.
இந்தப் பணிகள் முழுமையாக முடிந்த பின்பும் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை மூடாமல் அலட்சியமாக அப்படியே திறந்தபடி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவேக். இவருக்கு 2 வயதில் மித்ரா எனும் பெண் குழந்தை உள்ளது.

மித்ரா
மித்ராவிற்கு உடல்நலக்குறைவின் காரணமாக சோளிங்கரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்துமீண்டும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இவர் வீட்டின் இரு புறமும் கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ளன. இவர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தும் போது எதிரே ஒரு தாயும் மகனும் வருகிறார்கள்.

குழந்தை மித்ரா
அவர்களை பார்த்தபடியே மித்ராவும் வீட்டை நோக்கி வருகிறார். அப்போது குழந்தை மித்ரா கால்வாய் அருகே செல்வதற்கும் அதை விவேக் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. விவேக் மித்ராவை எச்சரித்து பிடிப்பதற்குள் அந்த குழந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து விடுகிறது. உடனே விவேக்கும் அந்த கால்வாயில் குதித்து தனது குழந்தையை காப்பாற்றினார்.

சாக்கடை கழிவுகள்
அதற்குள் அந்தத் தெருவில் உள்ளவர்கள் வந்துவிடுகிறார்கள். குழந்தையின் மீது உள்ள சாக்கடை கழிவுகளை துடைத்து விடுகிறார்கள். குழந்தை கழிவுநீரை குடித்திருந்ததால் குழந்தையும், கால்வாயில் குதித்து காப்பாற்றியதால் காயமடைந்த விவேக்கும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குழந்தை கால்வாயில்
குழந்தை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அந்த இரு பள்ளங்களையும் நகராட்சி அதிகாரிகள் வந்து மூடிவிட்டனர்.

நகராட்சி அதிகாரிகளிடம் ஆவேசம்
ஒரு வேளை அந்த குழந்தை விழுந்தது யாருக்கும் தெரியாமல் இருந்திருந்தாலோ இல்லை மகளையும் தந்தையையும் விஷவாயு தாக்கியிருந்தாலோ என்ன ஆகியிருக்கும் என மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசினர்.












Click it and Unblock the Notifications