சென்னையில் ஆட்டோ டிரைவரின் தவறால் பயங்கர விபத்து.. புது மாப்பிள்ளை உள்பட 3பேர் பலி
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிக்னல் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ சாலை தடுப்பில் மோதிய விபத்தில் மூவர் பலியாகினர். மூவர் படுகாயம் அடைந்தனர். ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
பொதுவாகவே அதிவேக பயணம் ஆபத்து. குறிப்பாக சென்னை போன்ற போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள நகரங்களில் அதிவேகம் மரணத்தில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது.
அதிவேக பயணம், கவனக்குறைவு காரணமாக தினசரி சென்னையில் விபத்து ஏற்படுகிறது. ஒரு கோடி பேருக்கு மேல் வாழும் சென்னையில் தினசரி விபத்து என்பது சர்வசாதாரணமாக உள்ளது. ஆனால் உயிரிழப்பு மற்றும் உடல் ஊனத்துடன் குடும்பங்கள் பேரிழப்பை சந்திக்கின்றன

அதிவேக பயணம்
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிக்னல் அருகே ஆட்டோ ஒன்று அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது மோதிவிடாமல் இருக்க ஆட்டோவை கட்டுபடுத்த முயன்ற போது வலதுபக்கம் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 பயணிகளில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐசக்ராஜ்(51), உத்திரமேரூரை சேர்ந்த சுந்தரராஜன்(37), பாண்டிச்சேரியை சேர்ந்த நாகமுத்து(36), ஆகிய மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

யார் யார் காயம்
மேலும் ஆட்டோவில் பயணித்த, கட்டிட வேலை செய்யும் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை(65), அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் ஆனந்த்குமார்(27), பெருங்களத்தூரை சேர்ந்த ரஜினிகாந்த் (வயது-45) ஆகிய மூவருக்கு முகம், நெற்றி, மூக்கு என பலத்த காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

3 பேர் உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த 3 பேரின் விவரம் தெரியவந்தது. கடலூர் பண்ருட்டியை சேர்ந்த ஐசக் ராஜ் (வயது-51) இவர் சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். பெருங்களத்தூர் கொளப்பாக்கத்தை சேர்ந்த சுந்தர்ராஜ்(வயது 37) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மற்றொருவர் பாண்டிசேரியை சேர்ந்த நாகமுத்து(வயது36) இவர்பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருபவர். இவர்கள் 3 பேரும் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவார். உயிரிழந்த பாண்டிசேரியை சேர்ந்த நாகமுத்துவிற்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

அதிவேகம்
போலீசார் விபத்து குறித்து கூறும் போது, சிலர் தங்கள் பணிமுடித்து, தாம்பரத்தில் ஆட்டோவில் ஏறியதாகவும், ஆட்டோவை ஓட்டுநர் அதிவேகமாக இயக்கி சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications