ப்பா.. சென்னையில் இவ்வளவு தெருவோரக் கடைகளா? 5 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்த எண்ணிக்கை
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள தெருவோர கடைகள் குறித்து தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு இன்னும் முடிவுறாத நிலையில், தற்போது வரை உள்ள கடைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணக்கிடப்பட்ட ஒட்டுமொத்த கடைகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 2017ல் 27,195 தெருவோர கடைகள் உள்ளதாக கணக்கிடப்பட்ட நிலையில் தற்போதுவரை 30,000 கடைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக சென்ன பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு முடியும் தறுவாயில் இந்த எண்ணிக்கை 70,000ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பு
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இந்த வியாபாரங்களை ஒழுங்குபடுத்தவும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெருவோர கடைகள் குறித்த கணக்கெடுப்பை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி இந்த கணக்கெடுப்பு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி, சுமார் 30,000 கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மண்டலங்கள்
களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளில் தெருவோர வியாபாரி மற்றும் விற்பனை புகைப்படம், சுய விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவையான இதர தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை பதிவு செய்யும் பணிகள் தற்போது கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். தெருவோர வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெறவும் வழிவகை செய்யப்படும். மேலும், தெருவோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார நிதியிலிருந்து பல்வேறு மேம்பாட்டு வசதிகளை பெறவும், உணவு விற்பனை கடைகள் நடத்திட தமிழக உணவு பாதுகாப்பு துறையின் தரச் சான்றிதழ் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலவச பதிவு
மேலும், "தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக, இஸ்ராம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் மத்திய அரசு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் மூலம் பதிவு கட்டணமின்றி தெருவோர வியாபாரிகளை பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்யும் வியாபாரிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மருத்துவ, விபத்து காப்பீடு வசதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியின் சார்பில் தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளர்களிடம் வியாபாரிகள் தங்களுடைய சுய விவரங்கள், விற்பனை பற்றிய தகவல்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை காண்பித்து இலவசமாக பதிவு செய்து கொண்டு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடையலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த பணிகள் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடங்களிலும் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் இறுதியில் சுமார் 70,000 தெருவோர கடைகள் அடையாளம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications