4 ஏக்கர் நிலம்.. பத்திரப்பதிவு முறைகேடு? போலீசுக்கு போன சென்னை கூடுவாஞ்சேரி சார் பதிவாளர்.. என்னாச்சு
சென்னை: சென்னை கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீட்டிற்குள் நுழைந்து, ரூ.50 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் போலி பத்திரிகையாளர் ஒருவர் கைதாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை மயிலாப்பூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம்.. இவருக்கு 46 வயதாகிறது. இவர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்... கடந்த 11ம் தேதி மயிலாப்பூர் போலீசில், வைத்தியலிங்கம் ஒரு புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் குறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது: விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வராகி (எ) கிருஷ்ணகுமார் (50), இவர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் வைத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டு, "நீங்கள், கூடுவாஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளீர்கள். இதுதொடர்பாக நான் செய்தி வெளியிட உள்ளேன்" என்று மிரட்டினார்.
அத்துடன், சார் பதிவாளர் அலுவலகத்திற்கே நேரில் வந்தும் வைத்தியலிங்கத்தை சந்தித்து மிரட்டல் தொனியிலும் பேசியுள்ளார். இதற்கு வைத்தியலிங்கம், எந்தத் தவறும் செய்யாத நான், எதற்கு உங்களுக்கு அநாவசியமாக பயப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
வீடியோ ஆதாரம்: இதனால், அவரது யூடியூப் வீடியோவை ஆயுதமாக பயன்படுத்தி, வைத்தியலிங்கத்தைப் பற்றி அவதூறாக பேசியிருக்கிறார் வராகி.. அப்போதும் வைத்தியலிங்கம் பணியாததால், வைத்தியலிங்கத்தின் வீட்டிற்கே வராகி, கூட்டளிகளுடன் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். அப்போதும் வைத்தியலிங்கம் அசைந்து கொடுக்கவில்லை.
பிறகு தனக்கு பெரிய இடத்தில் எல்லாம் தொடர்பு உள்ளது, உயர் காவல்துறை அதிகாரி ஒருவரும் எனக்கு தெரிந்தவர்தான், எல்லா பத்திரிகைகளிலும் உங்கள் குடும்பத்தை பற்றி செய்திகள் வரச்செய்துவிடுவேன் என்றார்.
மன உளைச்சல்: இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சார்பதிவாளர் வைத்தியலிங்கம், வேறுவழியின்றி வராகி மீது தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்" என்கிறார்கள். இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் வராகியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், சிசிடிவி ஆதாரங்கள், செல்போன் போன்றவற்றை ஆதாரமாக கொண்டு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் (66டி) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புழல் சிறை: பின்னர், சைதாப்பேட்டை 18வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வராகி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 27ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தன்னை ஊடகவியலாளர், மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் வராகியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, தாம்பரம்- வண்டலூர் இடையே உள்ள ஊரப்பாக்கத்தில் 2 ஏக்கர் 43 சென்ட் மற்றும் 1 ஏக்கர் 57 சென்ட் என மொத்தம் 4 ஏக்கர் நில விவாகரத்திலும், போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றது தொடர்பாக வராகி பெயர் அடிபட்டதாக போலீசார் கூறுகிறார்கள்.
போன் நம்பர்கள்: இதுபோல வராகியின் மிரட்டலால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே வராகியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை காவல்துறையினரிடம் 044-23452324, 044-23452325 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications