நாளை முடியும் கத்தரி வெயில்.. இன்று 9 இடங்களில் சதமடித்த வெப்பம்.. எந்த ஊரில் அதிகம் தெரியுமா
சென்னை: தமிழகத்தில் கத்தரி வெயில் நாளை முடியும் நிலையில், மாநிலத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது.
பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் நமது பூமி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டை விட வெயிலின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. மே மாதம் மட்டும் வெயில் மோசமாக இருக்கும் என்ற நிலை மாறி, பிப். இறுதி முதலே வெயில் வெளுத்து வாங்குகிறது.

கத்தரி வெயில்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே பல இடங்களில் வரலாறு காணாத வெயில் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்தச் சூழலில் கடந்த மே 4இல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. இந்த முறை அசானி புயல் காரணமாகக் கத்தரி வெயில் காலத்தில் சில நாட்கள் குளிர்ச்சியாக காணப்பட்டது. இருப்பினும், மற்ற நாட்களில் வெயில் வெளுத்து வாங்கவே செய்தது.

எங்கே அதிகம்
இந்தச் சூழலில் நாளையுடன் (மே 28) இந்த கத்தரி வெயில் முடிவடைகிறது. நாளை கத்தரி வெயில் முடியும் நிலையில், இன்று மட்டும் மாநிலத்தில் மொத்தம் 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இன்றைய தினம் அதிகபட்சமாகச் சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

சதம் அடித்த பகுதிகள்
மேலும், சென்னை நுங்கம்பாக்கம், கரூர், திருச்சியில் சுமார் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இவை தவிரக் கடலூர், மதுரை விமான நிலையம், நாகை, தஞ்சை பகுதிகளிலும் வெப்பம் சதம் அடித்தது. இந்த இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் இருக்கும் போதும் கூட இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை எங்கே
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications