திருமயிலை ரயில் நிலையத்தில் இருட்டுப் பள்ளம்.. தெரியாத ஆபத்து.. விஜயாவின் மரணம் எழுப்பும் கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமயிலை பறக்கும் ரயில் நிலையத்தில் விஜயா என்பவர் உயிரிழந்த சம்பவம், அங்கு நிலவும் பராமரிப்புக் குறைபாடுகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கழிப்பறையைப் பராமரித்து வந்த ஒப்பந்ததாரர் பணியைக் கைவிட்ட பிறகும் மாற்று ஏற்பாடு செய்யப்படவே இல்லை. பயன்பாட்டில் இல்லாத அறைகள் மற்றும் மறைவான பகுதிகளைக் கண்காணிக்கும் நடைமுறை இருந்ததாகவும் தெரியவில்லை. தொடர்ந்து பல நாட்களாகத் துர்நாற்றம் வீசியதாகக் கூறப்பட்ட நிலையில், அதன் காரணத்தைக் கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. தினமும் பல ஆயிரம் பேர் வரும் திருமயிலை ரயில் நிலையத்தில் இனியாவது அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விதான் நமக்கு எழுகிறது.

சென்னையில் பறக்கும் ரயிலில் பயணிக்கும் எவருமே, ரயில் நிலையங்கள் எல்லாமே பாழடைந்த கட்டிடம்போல், பேய்ப் பங்களாவைப் போல் இருப்பதைப் பார்த்திருப்பார்கள். முறையான அடிப்படை வசதிகளான கழிவறை, தூய்மை போன்றவை இருப்பதைப் பார்க்கவே முடியாது. அதேபோல், அங்கு ஏராளமானோர் வீடுகளைப் போல் ஆக்கிரமித்து வாழ்வதையும் பார்த்திருப்பார்கள்.

A dark pit at Thirumylai railway station A hidden danger questions raised by Vijaya s death

அங்கு மனிதக் கழிவுகள், கண்ட இடங்களில் குப்பைகள், உடைந்த சாமான்கள், அசுத்தமான அறைகள் எனப் பார்க்கவே கோரமாக இருக்கும். இது விவாதங்களைப் பலமுறை ஏற்படுத்தியிருந்தாலும், மனித உயிர்களை இந்தச் சுத்தமின்மை காவு வாங்காததால் மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், திருமயிலை ரயில் நிலையத்தில் விஜயா என்ற பெண் இறந்த சம்பவம்தான், திருமயிலை ரயில் நிலையத்தின் மோசமான பராமரிப்பு நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தின் சுவர்கள் மற்றும் தூண்களில், நீல நிறப் புடவை அணிந்த விஜயா என்பவரின் புகைப்படத்துடன் கூடிய காணாமல் போனவர் குறித்த சுவரொட்டிகள் பல நாட்களாக ஒட்டப்பட்டிருந்தன. ஆனால், கடந்த திங்கள்கிழமை அதே கட்டிடத்தில் இருந்து பல காயங்களுடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரைத் தேடி உறவினர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நம்பிப் பயன்படுத்தும் திருமயிலை உள்ளிட்ட பறக்கும் ரயில்கள் செல்லும் அனைத்து ரயில் நிலையங்களுமே எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன? தூய்மையாக இருக்கின்றனவா? கழிவறைகள் செயல்படுகின்றனவா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. ஆனால், அதற்கு இல்லை என்பதுதான் விடையாக இருக்கிறது.

விஜயாவின் அழுகிய உடலின் துர்நாற்றம் வந்து பல நாட்களாகியும் யாருக்கும் தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால், திருமயிலை ரயில் நிலையத்தில் நீண்ட காலமாக வழிப்போக்கர்களாக வசிப்பவர்களும், பணிபுரிபவர்களும் கூறும்போது, இறந்த நாய்கள், பூனைகள் மற்றும் எலிகளின் துர்நாற்றத்துக்குப் பழகிவிட்டதாகத் தெரிவித்தனர்.

"சில நாட்களுக்கு முன்பு கடுமையான துர்நாற்றம் வீசியது. இறந்த எலியாக இருக்கும் என்று நினைத்தோம். துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. இதனால் ஃபீனைல் தெளித்துக்கொண்டிருந்தோம். ஆனால், துர்நாற்றம் நிற்கவே இல்லை" என்றார்கள்.

பயணிகளுமே படிக்கட்டுகளில் மனிதக் கழிவுகள், சிறுநீர் துர்நாற்றம் போன்ற கஷ்டங்களை அனுபவித்துள்ளதால், இந்த நாற்றத்தை அவர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் திருமயிலை ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அவற்றில் பதிவான காட்சிகளைப் பார்த்திருந்தால்கூட விஜயாவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவந்திருக்கலாம்.


சரி, எப்படித்தான் விஜயாவின் உடலைக் கண்டுபிடித்தார்கள்?

விஜயாவின் மகள் காயத்ரி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, கழிவறைக்குச் செல்வதற்காக விஜயா மேல்தளத்தில் பயன்பாட்டில் இல்லாத ஓர் அறைக்குள் சென்றுள்ளார். ஆனால், காயத்ரி தனது தாய் எங்கு சென்றார் என்பதைக் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. விஜயா திரும்பி வராததால், அவர் நிலையத்தைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்று சந்தேகித்த காயத்ரி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாகப் புகார் அளித்தார்.

திங்கள்கிழமை தரைத்தளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, ஊழியர்கள் அரசு ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் திருமயிலை நிலையத்தை ஆய்வு செய்து, சுமார் 10 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட கைவிடப்பட்ட ஓர் அறைக்குள் சென்றார்கள். அங்கு இருந்த பழைய தளவாடங்கள், உடைந்த மர மேசைகள் மற்றும் சேதமடைந்த இரும்பு நாற்காலிகளை அகற்றியபோது, அழுகிய நிலையில் விஜயாவின் உடல் இருந்துள்ளது. இதையடுத்து, விஜயாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கழிப்பறைக்குச் செல்வதற்காக இரண்டாவது தளத்தில் இருந்த அறைக்குள் விஜயா சென்றதாகவும், அங்கு சுமார் ஒன்றரை அடி அகலமுள்ள திறப்பு வழியாக அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. கீழே இருந்த அறை பயன்படுத்தப்படாத பழைய பொருட்களைச் சேமித்து வைக்கும் இடமாக இருக்கிறது. மேல்தளத்தில் இருந்த திறப்பு வழியாக விழுந்த விஜயா, கீழ்தளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ரயில் நிலையத்தில் கழிவறைகள் முறையாக இயங்கியிருந்தால், பாதுகாப்பு ஊழியர்கள் எப்போதும் அங்கு ரோந்துப் பணியில் இருந்திருந்தால் விஜயாவின் மரணம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள். ரயில்வே போலீசாரும், சிங்கப்பெண் சிறப்புப் படையினரும் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்தில் கழிவறைகளைப் பராமரிக்கப் புதிய ஒப்பந்ததாரர்களை ரயில்வே நிர்வாகம் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. திருமயிலை போல் அனைத்து பறக்கும் ரயில் நிலையங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+