வீட்டு சிறையில் கெஜ்ரிவால்? ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்.. டெல்லி காவல்துறை விளக்கம்
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டு சிறையில் இருந்து விடுவிக்க கோரி தமிழகத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
புதிய சட்டங்கள், இடைத்தரகர்களை அகற்றுவதையும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் விற்க அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் விவசாயிகளை ஆழ்ந்த கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.

விலை தீர்மானம்
ஏனெனில் விவசாயிகள் பாரம்பரிய மண்டியிலிருந்து விலகி, அரசாங்கத்தால் செலுத்தப்படும் குறைந்தபட்ச விலை உத்தரவாதம் இல்லாமல் யாரிடமும் விற்கும் நிலை வரலாம் என்று அஞ்சுகிறார்கள். விலை பெருநிறுவனங்களே தீர்மானிக்கும் நிலை வரும் என்று எதிர்க்கிறார்கள்.

முதல் முதல்வர்
இந்நிலையில் டெல்லி-ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் சில கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கலந்து கொண்டார். இவர் தான் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற முதல் மாநில முதல்வர் ஆவார்.

அழுத்தம்
போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்து கெஜ்ரிவால் பேசும் போது , "விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் பிரச்சினையும் கோரிக்கைகளும் ஏற்ககூடியது தான். நானும் எனது கட்சியும் ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகளுடன் நின்றோம். அவர்களின் போராட்டங்களின் ஆரம்பத்தில், டெல்லி காவல்துறை ஒன்பது அரங்கங்களை சிறைகளாக மாற்ற அனுமதி கோரியது. எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது ஆனால் அனுமதிக்கவில்லை.

துணை நிற்பேன்
"எங்கள் கட்சி, எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் விவசாயிகளுக்கு ' சேவகர்களாக (தன்னார்வலர்களாக) பணியாற்றி வருகின்றனர். நான் இங்கு முதல்வராக வரவில்லை, ஆனால் ஒரு சேவகனாக வந்துள்ளேன். விவசாயிகள் இன்று சிக்கலில் உள்ளனர், நாங்கள் அவர்களுடன் நிற்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கிறது டிசம்பர் 8 நாடு தழுவிய பந்த் போராட்டத்தில் ஆம் கட்சி தொண்டர்கள் பங்கேற்பார்கள்" என்றார்.

போராட்டம்
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு சிறையில் இருந்து கெஜ்ரிவாலை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பிரச்சனை இல்லை
ஆனால் இது தவறான குற்றச்சாட்டு என டெல்லி காவல்துறை, ஆம் கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. டெல்லி வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அன்டோ அல்போன்ஸ், "பொய்யான மற்றும் "ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது. "நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி இரவு 10 மணியளவில் திரும்பினார். எந்த பிரச்சினையும் இல்லை" என்று கூறினார்.