அப்போ இந்தி பேசும் திமுக அமைச்சர்களும் எம்பிக்களும் பானிப்பூரி விற்க போறாங்களா?.. குஷ்பு கேள்வி
சென்னை: விரைவில் இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், அவர்களது குடும்பத்தினர் பானிபூரி விற்க போகிறார்கள் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் விமர்சித்துள்ளார்.
Recommended Video
அண்மைக்காலமாக தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன. திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்தி திணிப்புக்கு எதிராக பல இடங்களில் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி முன்பே இந்தி குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொன்முடி
பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது பொன்முடி பெண்கள் படிப்பில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகமும் இருந்தது. ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள். இதுதான் திராவிடல் மாடல்.

பெரியார் மண்
இது பெரியார் மண், இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் கொள்கை. மாணவர்கள் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநருக்குத் தெரியப்படுத்தவே இதைக் கூறுகிறேன். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் சொல்கிறார்கள்.

ஆளுநர் முன்பே பானிப்பூரி
கோவையில் பானிப்பூரி கடை நடத்துபவர்கள் யார். நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்றுதான் கூறுகிறோம் என்றார். இந்தி பேசுபவர்கள் பானிப்பூரிதான் விற்க முடியும் என அமைச்சர் பொன்முடி பேச்சு புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பொன்முடிக்கு குஷ்பு கண்டனம்
அந்த வகையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், இந்தி பேசும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் விரைவில் பானிப்பூரி விற்க போகிறார்கள். அதை நாம் பார்க்க போகிறோம். இப்படி ஒரு வார்த்தையை அதுவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியது வெட்கக் கேடு. இது போன்றவர்களிடம் நாம் இவற்றை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறாரா என தெரியவேண்டும் என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications