பிரகாஷ்ராஜ் பாஜகவில் இணைகிறாரா? "என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவங்க கிட்ட காசு இல்லை" ஒரே போடு
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பாஜக கடுப்பாகி வருகிறது.. என்ன காரணம்?
நடிகர் பிரகாஷ் ராஜ், ஏராளமான சமூக பிரச்னைகள் குறித்து தன்னுடைய கருத்துகளை தெரிவித்து வருபவர்.. அதேபோல, பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருபவர்.

தற்போது தேர்தல் என்பதால், கடந்த சில நாட்களாகவே பாஜகவையும், பிரதமர் மோடியையும் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார்... அந்தவகையில், "நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்" என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசியதையும் விமர்சித்திருந்தார்.
மணிப்பூர்: உடனே மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும், தங்களின் எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் "மோடியின் குடும்பம்" என்று சேர்த்திருந்தனர். உடனே நடிகர் பிரகாஷ் ராஜ் "மணிப்பூர் மக்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் எல்லாம் உங்களின் குடும்பம்தானா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்,

இபபடி, பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், துணிச்சலான கருத்தையும் வெளிப்படுத்தியவாறே வருபவர் பிரகாஷ்ராஜ்..
ஆதரவு: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்கக் கோரி லடாக்கில் உண்ணாவிரதம் இருந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, தன்னுடைய பிறந்தநாளான மார்ச் 26ம் தேதியன்று சந்தித்து, ஆதரவையும் சோனத்திற்கு தந்திருந்தார் பிரகாஷ் ராஜ்.
இப்படிப்பட்ட சூழலில், பாஜகவில் பிரகாஷ் ராஜ் இணைய போவதாக செய்திகள் பரவின.. அதாவது, "தி ஸ்கின் டாக்டர்" என்ற ஐடி பிரகாஷ் ராஜ் இன்று மதியம் 3 மணிக்கு பாஜகவில் இணைய இருக்கிறார் என்று ட்வீட் செய்திருந்தது. இது அனைவருக்கும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் தந்தவாறே இருந்தது.. இந்நிலையில், பிரகாஷ் ராஜ் அதற்கு விளக்கம் ஒன்றினை தந்துள்ளார்.
ட்வீட்: இந்த ட்வீட்டை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் டேக் செய்து, "பாஜகவினர் அதற்கு முயற்சி செய்தார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், அவர்களது சித்தாந்தங்களை வைத்து என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே" என கேட்டுள்ளார்.
பாஜகவில் இணைய போவதாக பரவிய வதந்திகளுக்கு, பிரகாஷ்ராஜ் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், இந்த ட்வீட்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அத்துடன் பாஜகவுக்கு கடுப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications