நடிகர் விஜய்யின் அடுத்த அதிரடி.. சென்னையில் வழக்கறிஞர்கள் ஆலோசனையில் முக்கிய முடிவு! என்ன தெரியுமா?
சென்னை: சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேளையில் சட்டம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது சமீபத்திய நடவடிக்கைகள் என்பது விரைவில் அவர் அரசியலில் நுழையலாம் எனும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் கூட நடிகர் விஜய் தான் அரசியல் கட்சி துவங்குகிறேன். அரசியலில் நுழைகிறேன் என எதையும் தெரிவிக்கவில்லை.

மாறாக அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் அரசியலுக்கு நுழைவதற்கான அஸ்திவாரமாக தான் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றன. அதாவது முதலில் அவர் தனது விஜய் மக்கள் இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தினார்.
அதன்பிறகு தொகுதி வாரியாக கடந்த 5 ஆண்டுகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விஷயங்களை நிர்வாகிகளிடம் அவர் சேகரித்தார். அதன்பிறகு சமீபத்தில் அவர் சட்டசபை தொகுதி வாரியாக 10, 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை சென்னை அழைத்து வந்து பாராட்டி உதவித்தொகை வழங்கினார்.
இந்த வேளையில் அவர், ‛‛ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள்'' என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் பெரியார், காமராஜரை படியுங்கள் என அவர் கூறினார். அதன்பிறகு ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டத்தை விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் விஜய் மக்கள் இயக்கத்தில் வழக்கறிஞர் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களுடன் இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, நம் இயக்கங்களுக்கும், இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட பிரச்சனை வந்தால் அதற்கு உதவி செய்ய வேண்டும். சட்ட ஆலோசனைகள் வழங்க வேண்டு. அதோடு இயக்கம் சார்ந்த நற்பணிகளை தொடர வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக அரசியலில் நுழைந்தால் சில முக்கிய பிரச்சனைகளை நிர்வாகிகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இத்தகைய சூழலில் வழக்கறிஞர் அணி என்பது மிகவும் முக்கியமானது. பாஜக, காங்கிரஸ் உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளில் வழக்கறிஞர்கள் அணி உள்ளது. குறிப்பாக திமுகவில் வழக்கறிஞர் அணி மிகவும் பலமாக உள்ளது. இதனால் தான் விஜய் மக்கள் இயக்கம் வழக்கறிஞர் அணியை பலப்படுத்த முடிவு செய்து ஆலோசனையை முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications