வெள்ளை அறிக்கை இல்ல.. வேஸ்ட் அறிக்கை! கோட்டையில் லெஃப்ட் ரைட் வாங்கிய சிஎம் விஜய்! பம்மிய ஆபீசர்ஸ்?
சென்னை: தமிழக அரசின் நிதிநிலை குறித்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை, முதல்வர் விஜய்யின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியின் நிதி நிர்வாகம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் இடம்பெறவில்லை என்ற காரணத்தால் முதல்வர் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிதித்துறை அதிகாரிகளை விஜய் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, மாநிலத்தின் உண்மையான நிதிநிலையை மக்களிடம் வெளிப்படையாக கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.

குறிப்பாக, தேர்தல் பிரசார காலத்திலேயே தமிழகத்தின் கடன் சுமை மற்றும் நிதி நிர்வாகம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த அவர், ஆட்சிக்கு வந்த பிறகு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
வெள்ளை அறிக்கை
அதன்படி, நிதி அமைச்சர் மரிய வில்சன் தலைமையில் தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே அரசியல் விமர்சனங்கள் எழத் தொடங்கின. குறிப்பாக, திமுக ஆட்சியில் ஏற்பட்டதாக கூறப்படும் நிதி முறைகேடுகள், திட்டச் செலவினங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள், அதிகப்படியான கடன் சுமைக்கு காரணமான முடிவுகள் போன்றவை குறித்து தெளிவான தகவல்கள் இடம்பெறவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
தமிழக நிதிநிலை
அரசு வட்டாரங்களில் கூறப்படுவதாவது, வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணிக்கு முன்பாக பல்வேறு துறைகளில் இருந்து விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. மாநிலத்தின் நேரடி கடன், பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் கடன்
குறிப்பாக, தமிழக அரசின் நேரடி கடன் ரூ.10 லட்சம் கோடியை நெருங்கியிருந்தாலும், மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் மாநிலத்தின் மொத்த நிதிச்சுமை ரூ.13 லட்சம் கோடியை தாண்டும் என்ற தகவல் அரசின் கவனத்தை ஈர்த்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிக்கை வெளியிடப்பட்டபோது அந்த விவரம் பெரிய அளவில் வலியுறுத்தப்படவில்லை என்ற கருத்து ஆளுங்கட்சி வட்டாரங்களில் நிலவுகிறது.
திமுக ஆட்சி
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களில் செலவிடப்பட்ட தொகைகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சில திட்டங்களின் டெண்டர் மதிப்பீடுகள் குறித்து அமைச்சர்கள் முன்பே சந்தேகம் எழுப்பியிருந்தனர். திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிக செலவுகள் காட்டப்பட்டதா, அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதா என்பது போன்ற கேள்விகளும் எழுந்திருந்தன. ஆனால் வெள்ளை அறிக்கையில் இதுபோன்ற விவரங்கள் விரிவாக இடம்பெறவில்லை.
நிதி அறிக்கை
எந்த திட்டத்தில் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது, அதில் எவ்வளவு செலவிடப்பட்டது, பயன்படுத்தப்படாத நிதி எவ்வளவு, திட்ட தாமதங்களால் ஏற்பட்ட கூடுதல் செலவு என்ன என்பது போன்ற தகவல்கள் இடம்பெறாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் திமுக ஆட்சியின் நிதி நிர்வாகத்தை கடுமையாக விமர்சிக்க ஆளுங்கட்சிக்கு தேவையான ஆதாரங்கள் அறிக்கையில் போதுமான அளவில் இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் பலரும் சமீபத்தில் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடப்பிடத்தக்கது.
முதல்வர் விஜய்
முந்தைய நிதித்துறை நிர்வாகம் குறித்து முழுமையான தகவல்களை திரட்டுவதில் சில சிக்கல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், வெள்ளை அறிக்கை வெளியான பிறகு நடைபெற்ற ஆலோசனையில் முதல்வர் விஜய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மக்களுக்கு உண்மை நிலை தெளிவாக புரியும் வகையில் அறிக்கை இருக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் நிதிநிலை குறித்து மேலும் விரிவான தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சட்டசபை கூட்டத்தொடர்
இதற்கிடையில், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் இந்த விவகாரம் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை அறிக்கையில் இடம்பெறாத பல முக்கிய தகவல்களை முதல்வர் விஜய் தனது பதிலுரையில் வெளியிடலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநிலத்தின் கடன் சுமை, நிதிப் பற்றாக்குறை, திட்டங்களின் செயல்பாடு, வருவாய் வளர்ச்சி, செலவு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் அப்போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications