25 எம்.எல்.ஏ.க்கள் வராங்களா?.. குதிரை பேரம் நடப்பது உண்மைதானோ?.. விசிக ரஜினிகாந்த் பரபரப்பு
சென்னை: தவெகவில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணைய தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். அவருடைய அந்தப் பேச்சு தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையே என்பதை உறுதிப்படுத்துகிறது என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, விசிக துணைப் பொதுச் செயலாளர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: தவெக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகிறபோது, அதிமுகவில் இருந்து 10 எம்எல்ஏக்கள் தவெகவில் சேர இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த எண்ணிக்கை 25 ஐ கடக்கும் என்று கூறியிருப்பது அதிர்ச்சியையும், மிகப்பெரிய கேள்வியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக என்பது இளம் தலைமுறைகள் அடங்கிய ஒரு தூய சக்தி என்றும், அதிமுகவை ஊழல் சக்தி என்றும் விமர்சித்தவர் இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய். ஆனால், அந்த அதிமுகவில் இருந்து அனைத்து ஊழல் பேர்வழிகளையும், குறிப்பாக ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர்களை தொடர்ச்சியாக இணைத்து வருவதும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்ச்சியாக இணைத்து வருவதும் புதிய மொந்தையில் பழைய கள்ளைச் சேர்க்கிறார்களோ, இன்றைக்கு தவெக புதிய மொந்தையில் பழைய கள்ளாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெகவில் ஊழல் பேர்வழிகள்
இன்றையக்கு தூய ஆட்சியை, தூய நிர்வாகத்தை தருவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிற தவெக அரசு ஊழல் பேர்வழிகள் என்று பெயர்பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வது என்பது அந்த நிலைப்பாட்டுக்கு நேரெதிரானது இருக்கிறது. அதிமுகவில் இருந்து தவெகவில் சேர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் போன்றோர் எதற்காக வருகிறார்கள்.
மக்கள் சேவை, என்ன கொள்கை அவர்களுக்கு இருக்கிறது. பதவியும், பணமும் இல்லாமல் இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு என்ன கொள்கைக்காக அவர்கள் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. கூட்டணி அரசு இன்று நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணி அரசுக்கு விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் ஆதரவு கொடுத்து கொண்டிருக்கின்றன.
தூயசக்தியாக மாறிவிட்டார்களா..
தவெகவின் இதுபோன்ற நிலைப்பாடானது, இந்த கூட்டணி ஆட்சிக்கே பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்துகிற நிலைப்பாடு இது. இந்த நடவடிக்கையை தவெக முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊழல் பேர்வழிகள் தவெகவில் இணைந்ததால் வாஷிங் மெஷினில் துவைத்து எடுக்கப்பட்ட தூயவர்களாக மாறிவிட்டார்களா என்று எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர்.
அந்த கேள்வி நியாயமானது என்பதை நிரூபிக்கும் வகையில் தான் தவெகவின் செயல்பாடு உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் தவெகவில் இணைகிறார்கள் என்கிற விமர்சனமும் இருக்கிறது. அந்த வகையில், குதிரை பேரம் நடப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
குதிரை பேரமா?
எந்த அடிப்படையில், 10 எம்எல்ஏக்கள் உங்களிடம் வரப்போகிறார்கள். 25 எம்எல்ஏக்களை எந்த அடிப்படையில் நீங்கள் இணைக்க இருக்கிறீர்கள். அதற்கு பின்னால் நடக்கிற விஷயங்கள் என்ன என்கிற கேள்வி எழுகிறது. ஆகவே, குதிரை பேரம் நடப்பது உண்மையோ என்கிற ஐயத்தையும் உருவாக்குகிறது. இத்தகைய நிலைப்பாடுகளை தவெக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ஆட்சி தொடர்வதற்கு ஆதரவாக இருக்கிற விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை மிகப்பெரிய தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்க கூடாது. இத்தகைய செயல்பாடுகள் உங்கள் மீது இருக்கிற நல்லெண்ணத்தை அடியோடு மாற்றுகிற ஒரு சூழலை ஏற்படுத்தும். ஆகவே இதனை விசிக ஏற்கவில்லை. இதனை ஏற்கனவே 6 எம்எல்ஏக்கள் இணைத்தபோது கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இந்த நடவடிக்கை தங்கள் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதை முதல்வர் விஜய்க்கு சொல்லியிருக்கிறார். எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பதே அனைவரின் நிலைப்பாடாக உள்ளது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
