சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜதந்திரியே பட்டுனு உடைச்சிட்டாரே! ஓபிஎஸ்+ஈபிஎஸ் சேர்ந்தாலும் ‘வாய்ப்பில்ல ராஜா’.. அதிரும் அதிமுக!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்தாலும், வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன். பாஜக + அதிமுக கூட்டணி அமைந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றும் இப்போதே அதிமுகவை ஒருங்கிணைத்து, மக்களை ஈர்க்கக்கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவை மீண்டும் பெற்று போராடினால் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்தபோதே சர்வ பலம் கொண்ட ஜெயலலிதாவை விமர்சித்த பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர் என உறுதியாகக் கூறுகிறார்.

ஓபிஎஸ் அணிக்கு ஆலோசனைகளைக் கூறி வியூகங்களை வகுத்துக் கொடுத்து வரும் பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழக அரசியல் களத்தையும், கட்சித் தொண்டர்களின் மனநிலையையும் நன்கறிந்தவர். 'ராஜதந்திரி' என அழைக்கப்படும் பண்ருட்டியார், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.

இணையவே முடியாத பிளவு?

இணையவே முடியாத பிளவு?

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான அதிகார மோதல் முற்றி, தற்போது மீண்டும் இணையவே முடியாதபடிக்கு பிளவு வலுப்பெற்றுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை, எடப்பாடி பழனிசாமி நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, அதே பொதுக்குழு மேடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவின் விருப்பம்

பாஜகவின் விருப்பம்

இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தார். இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சாதகமான உத்தரவுகள் வந்துள்ளன. இதற்கிடையே, அதிமுக தலைமை விவகாரத்தில் மத்தியில் ஆளும் கூட்டணி கட்சியான பாஜக மேலிடம், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புவதாகக் கூறப்படுகிறது. அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என்றும் அக்கட்சி கருதுகிறது.

வெளிப்பட்ட விரோதம்

வெளிப்பட்ட விரோதம்

ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மிகவும் பிடிவாதமாக இருப்பது பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அண்மைக்காலமாகவே, அதிமுக நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் இடையே கூட்டணி விவகாரத்தில் கருத்து மோதல் நீடித்து வருவது, கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பொதுமேடைகளில், பாஜகவை விமர்சிப்பது, பாஜக நிர்வாகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களை மேலும் டென்ஷன் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தனித்து நிற்க ரெடி

தனித்து நிற்க ரெடி

ஓபிஎஸ் விவகாரத்தில் தனது செயல்பாட்டுக்கு பாஜக உடன்படவில்லை என்றால், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்ற மனநிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவும் தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் கூட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தனித்துப் போட்டியிடுவது பற்றி பேசியதாக தகவல் வெளியானது.

ஓபிஎஸ் டீம்

ஓபிஎஸ் டீம்

எடப்பாடி - பாஜக இடையிலான உறவு இப்படிச் சென்றுகொண்டிருக்கும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம், பாஜக உடனான கூட்டணியில் உறுதியாக இருக்கிறார். ஓபிஎஸ் அணியினர் முழுமையான பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாஜக தலைவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகிறார் ஓபிஎஸ். இந்நிலையில், சமீபத்தில் குஜராத்தில் பாஜக தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்த பிறகு, தமிழகம் திரும்பி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் ஓபிஎஸ் தரப்பினர் நடத்தி முடித்தனர்.

அணிகள் சேர்ந்தாலும்

அணிகள் சேர்ந்தாலும்

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விளாசியுள்ளனர் ஓபிஎஸ் அணியினர். ஓபிஎஸ்ஸூக்கு ஆலோசகராகச் செயல்பட்டு, வியூகங்களை அமைத்துக் கொடுக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்றெல்லாம் விமர்சித்திருந்தார். மேலும், அடுத்தடுத்த நகர்வுகளையும் ஓபிஎஸ் தரப்பு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் அத்தனை அணிகளும் ஒன்று சேர்ந்தாலும் கூட வரும் எம்.பி தேர்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

பாஜக கூட்டணியா

பாஜக கூட்டணியா

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு பேட்டியில், மக்களுக்கு நல்லது செய்தால் எந்தக் கட்சியாக இருந்தாலும் வரவேற்போம். பாஜக கூட்டணியா, மற்ற கட்சி கூட்டணியா என்பதையெல்லாம் காலம் தான் சொல்லும். திமுக, அதிமுக அல்லாமல் ஒரு கட்சியும் இங்கு ஆட்சிக்கு வரக்கூடும். முதலில் அதிமுகவை காப்பாற்ற வேண்டும், அதன்பிறகு அதற்கு யார் தலைமை தாங்குவது என்பதையெல்லாம் தீர்மானிக்கலாம். ஓபிஎஸ் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர். சட்டரீதியாகவும் அவருக்கு இன்று பலம் இருக்கிறது. குருட்டு அதிர்ஷ்டத்தில் பதவி பெற்றவர் அல்ல எனப் பேசியுள்ளார்.

சாணக்கியத்தனம்

சாணக்கியத்தனம்

மேலும், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் அனைவரும் ஒன்றுபடுவதை ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால், எடப்பாடி பழனிசாமி மட்டும் முரண்டு பிடிக்கிறார். எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பது அல்ல, அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதுதான் சாணக்கியத்தனம். அதிமுகவின் வாக்கு சதவீதம் 18 சதவீதத்திற்கு வந்துவிட்டது. 3 பெரிய தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. அதிமுக எனும் கட்டடம் 3 முறை சரிந்துவிட்டது. அடுத்து வீழ்ச்சி தான். தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும்போது, எடப்பாடி பழனிசாமி விலகி நின்று வேறொருவரை நடத்தச் சொல்வதுதான் கட்சிக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக வெற்றி பெறாது

அதிமுக வெற்றி பெறாது

மேலும் பேசியுள்ள பண்ருட்டியார், எடப்பாடி பழனிசாமிக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. அவர் ஆட்சியில் இருக்கும்போது 3 தேர்தல்களிலும் அதிமுக தோற்றுவிட்டது. இனி அவர் தலைமையில் தேர்தலைச் சந்தித்தால் அதிமுக மொத்தமாக வீழ்ந்துவிடும். ஓட்டு கேட்கவே ஈபிஎஸ் அணியினர் போக முடியாது. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், அதிமுகவின் எல்லா அணிகளும் சேர்ந்தாலும் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. மக்களின் நல்லெண்ணங்களைப் பெறும் வகையில் செயல்பட்டால் தான் எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு குறைவு

வாய்ப்பு குறைவு

மேலும், "பாஜக எதிர்ப்பில் திமுக வலுவாக இருக்கிறது. கூட்டணி பலம் இருக்கிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பாஜக எதிர்ப்பின் காரணமாக எந்தக் காரணத்தாலும் திமுகவை விட்டு வரமாட்டார்கள். பாஜக + அதிமுக கூட்டணி அமைந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான். எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. இப்போதே அதிமுகவை ஒருங்கிணைத்து, மக்களை ஈர்க்கக்கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவை மீண்டும் பெற்று, பாஜகவுடனோ மற்ற கட்சிகளுடனோ கூட்டணி அமைத்துப் போராடினால் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம், அப்போது கூட மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை" எனப் பேசி இருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

ராஜதந்திரி

ராஜதந்திரி

எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கியபோது, பண்ருட்டி ராமச்சந்திரன், அவருக்குப் பக்கபலமாக இருந்து பல அரசியல் நகர்வுகளை முன்கூட்டியே கணித்து சாதுரியமாகச் செயல்பட்டவர். திமுகவுடன் அதிமுகவை இணைக்க எம்.ஜி.ஆரே தயாரானபோது, அவரது முடிவை மாற்றியவர் என சொல்லப்படுவதுண்டு. அதனால், அரசியல் ராஜதந்திரி என்று அ.தி.மு.க-வினராலேயே அழைக்கப்படுபவர். ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்தது முதல் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் அவ்வப்போது சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறார். அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அரசியல் நகர்வுகளைக் கவனித்துவரும் பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுக ஒன்றிணைந்தாலும் வெற்றி பெறுவது கடினம் எனக் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தனித்து நிற்கும் முடிவில் இருக்கும் நிலையில், அதிமுகவின் அத்தனை அணிகளும் சேர்ந்தாலும் வெற்றி வாய்ப்பு குறைவுதான் என 'பளிச்' என கூறியுள்ளார் பண்ருட்டியார்.

English summary
Panruti Ramachandran, political adviser of OPS team, has created a sensation by saying that even if all the teams of AIADMK unite, AIADMK will not win the upcoming elections. Even if a BJP + AIADMK alliance is formed, there is little chance of winning, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X