இந்த முறை விட கூடாது! மெயின் ‘தலையை’ பாத்தே ஆகனும்! துண்டு போடும் இபிஎஸ்! அட்டாக்கை ஆரம்பித்த ஓபிஎஸ்
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை விரைவில் மீண்டும் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தீவிரமாக முயன்று வருகிறது.
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முற்றிய நிலையில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதவியேற்ற அதே மேடையிலேயே கட்சியில் தனக்கு எதிராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதற்கான தீர்மானம் முன்மொழிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவர் தரப்பு முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி
விவகாரம் அதோடு முடிவடைந்து விட்டதாக கருதிய நிலையில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சட்ட போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளார் ஓபிஎஸ். ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்குவது, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை நீக்கிவிட்டதாக ஓபிஎஸ் அறிவிப்பது என நாளுக்கு நாள் இந்த விவகாரம் சூடு பிடித்து வருகிறது. தற்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் எடப்பாடி இருக்கிறார்.

பிரதமர் வருகை
இதனை பயன்படுத்தி ஓபிஎஸ் எடப்பாடி தரப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை வளைக்க திட்டம் போட்டு வருகிறார். இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற இருக்கிறது.இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 11ஆம் தேதி அவர் வருவதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக தொடர்பாக எதுவும் பேசவில்லை எனவும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசி இருந்ததாக கூறினார். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அப்பாயிண்ட்மெண்ட்
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. இதனை அக்கட்சியின் தேசிய பொறுப்பாளர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நிச்சயம் சந்திப்பாரா?
அதே நேரத்தில் மதுரை வரும் பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிச்சயம் சந்திக்கும் என கூறப்படுகிறது. இதற்கான நடைமுறைகளை ஏற்கனவே அவரது மகனான ரவீந்திரநாத் குமார் எம்பி முடித்து வைத்து நிலையில் கடந்த முறை போல நாளிதழ்களில் பிரம்மாண்ட விளம்பரம், வழிநெடுக வரவேற்பு என மாஸ் காட்ட திட்டமிட்டு இருக்கிறார் ஓபிஎஸ். இதற்கான வேலைகளும் திரை மறைவில் நடைபெற்று வருகிறது. பிரதமரை சந்திக்க முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கிய போதே ஓபிஎஸ் தரப்பு வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருவது எடப்பாடி தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. அதே நேரத்தில் இருவரையும் பிரதமர் சந்திப்பாரா என்பதும் கேள்விக்குறிதான் என்கின்றனர் தென் மண்டல பாஜகவினர்.












Click it and Unblock the Notifications