ஆனாது ஆகிப் போச்சு.. முரண்டு பிடிக்கும் சீனியர்ஸ்! எடப்பாடியிடம் டீல் பேசும் புதிய டீம்! அதகள அதிமுக
சென்னை: அதிமுக தொடர்பான சலசலப்புகள் சற்றே அடங்கி இருப்பது போல் தோன்றினாலும் இன்னும் கட்சிக்குள் நீரு பூத்த நெருப்பாக சில விவகாரங்கள் பற்றி எரிகிறதாம். சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட தலைவர்கள் கோபத்தில் இருக்கும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி ஒரு புதிய டீமை களத்தில் இறக்கி உள்ளாராம்.
2026 சட்டமன்ற தேர்தல் வரலாறுகளை திருப்பி போட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் எந்த கட்சியும் ஆட்சியைப் பிடித்ததில்லை என்பதுதான் வரலாறு. ஆனால் அதனை மாற்றியது தமிழக வெற்றி கழகம்.
மேலும் கூட்டணியே இல்லாமல் தாங்கள் சந்தித்த முதல் தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்றது அந்த கட்சி. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தை பலமுறை ஆண்ட கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்த அதிமுக பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.

அதிமுக
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போர் கொடி தூக்கி இருக்கின்றனர். ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் தாவி இருக்கின்றனர்.
சிவி சண்முகம்
இதற்கெல்லாம் விதை போட்டது சிவி சண்முகமும், எஸ் பி வேலுமணியும் தான். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கொடி பறக்குதா? என எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தில் கேட்டது அதனை உறுதி செய்வது போல் இருந்தது. ஆனால் கடைசி வரை கூட்டணி அமையவில்லை பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது அதிமுக.
தமிழக வெற்றிக் கழகம்
இதற்கிடையே தேர்தல் தோல்விக்கு பிறகாவது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எஸ்பி வேலுமணி சிவி சமூகத்தின் பேச்சை எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை. இதை அடுத்து அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு உருவானது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார் எடப்பாடி. தொடர்ந்து அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
நத்தம் விஸ்வநாதன்
இடையில் சில பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்த மனு வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோரோடு சில முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கின்றனர். தற்போது தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.
அதிமுக ஆலோசனை கூட்டம்
கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் அதிமுக ஆலோசனை கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவர்கள் பொதுக்குழு செயற்குழுவை கூட்ட திட்டமிட்டு வருவதாக சொல்லப்படும் தகவல் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களிடம் அவர்கள் கையெழுத்து பெற்றிருப்பதாக சொல்லப்படும் நிலையில், வழக்கமாக அதிமுக செயற்குழு கூட்டம் நடக்கும் மண்டபத்தை பேசி வைத்திருக்கிறார்களாம்.
எடப்பாடி பழனிச்சாமி
இந்த தகவலை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் நேரடியாக பேச முடியாததால் சில முக்கிய தலைவர்களை களத்தில் இறக்கி உள்ளாராம். இந்த நிலையில் அதிமுக உடைய கூடாது என்பதற்காக சில முன்னால் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அணுகி இருப்பதாக சொல்கின்றனர். பிரிந்து போனவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் இந்த பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
டிடிவி தினகரன்
ஆனால் கட்சியிலிருந்து சென்றவர்கள் சென்றவர்களாகவே இருக்கட்டும்.. இருப்பவர்களை அரவணைத்துச் செல்கிறேன் என்ற வாக்குறுதியை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்திருப்பதாக சொல்கின்றனர். டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் வைத்திலிங்கம், உள்ளிட்ட பலரையும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு புதிய டீம் எடப்பாடியை அணுகி இருக்கிறது என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர்.


Click it and Unblock the Notifications
