எங்க இருக்கோங்கறது முக்கியமல்ல.. ஆனந்த் மகிந்திராவையே திரும்பி பார்க்க வைத்த லாரி டிரைவர்! வேற லெவல்
சென்னை: "எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.. நாம என்ன பண்ணுறோம் என்பதுதான் முக்கியம்" என்று சொல்லும் அளவுக்கு லாரி டிரைவர் ஒருவர் சாதித்து காட்டியுள்ளார். இவரது சாதனையை பார்த்து ஆனந்த் மகிந்திராவே பாராட்டி ட்வீட் பதிவிட்டுள்ளார். அது என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.
நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா.. சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். இந்தியாவில் பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் மகிந்திரா குழுமங்களின் தலைவராக இருந்த போதும் கூட சமூக வலைத்தளங்களில் எந்த பந்தாவும் இன்றி தனது எதார்த்தமான பதிவுகள் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.

ஆன்ந்த மகிந்திரா... தொடர்ச்சியாக எக்ஸ் தளத்தில் பல சுவாரசியமான தகவல்களை பதிவிட்டு வருகிறார். தனக்கு பிடித்தமான தன்னம்பிகையூட்டும் கதைகள், எளிய பின்னணியில் இருந்து சாதித்த நபர்கள் பற்றிய தகவல்கள், வினோதமான வீடியோக்கள் என பலவற்றையும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
ஆனந்த் மகிந்திரா பாராட்டு: அதேபோல, திங்கள் கிழமைகளில் #MondayMotivation என்ற பெயரில் ஆனந்த் மகிந்திரா இடும் பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும். இணையத்தில் இவரது பதிவுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லும் அளவுக்கு ஆனந்த மகிந்திராவின் பதிவுகள் லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் அள்ளும்.
அந்த வகையில், இன்று காலை ஆனந்த் மகிந்திரா வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சாதாரண லாரி டிரைவர் ஒருவர் தனது பயணத்திற்கு நடுவே.. வீடியோக்களை பதிவு செய்து அதனை யூடியூப் சேனல்களில் பதிவிட்டு அதன் மூலம் கணிசமான வருவாயை பெறுவது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.
செலிபிரிட்டியான லாரி டிரைவர்: ஆனந்த மகிந்திரா தனது பதிவில் கூறியிருப்பதாவது:- ராஜேஷ் ரவானி என்ற நபர் 25 ஆண்டுகளாக லாரி ஓட்டி வருகிறார். தனது தொழிலுடன் தற்போது ஃபுட் & டிரவல் வீடியோக்களை யூடியூப்பில் போட்டு வருகிறார். இதன் மூலம் செலிபிரிட்டியாக மாறியிருக்கும் அந்த லாரி டிரைவருக்கு தற்போது 1.5 மில்லியன் பாலோயர்கள் யூடியூபில் உள்ளனர்.
தனது வருமானம் மூலம் அண்மையில் தான் ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். எந்த வயது.. என்ன தொழில் என்பது முக்கியம் இல்லை. புதிய தொழில் நுட்பத்தை எப்போது கையில் எடுத்தாலும் நம்மை புதுப்பித்துக்கொள்ள முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்" என்று பதிவு செய்துள்ளார். தனது பதிவுடன், ராஜேஷ் ரவானியின் யூடியூப் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.
புதிய எண்ணத்துக்கு பாராட்டு: ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் லாரி ஓட்டுநரின் புதுமையான எண்ணத்தையும் சாதாரண நபர்களையும் ஊக்குவிக்கும் ஆனந்த் மகிந்திராவின் எண்ணத்தையும் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள். சில நெட்டிசன்களோ... புதிய தார் கார் ஒன்று அந்த டிரைவருக்கு ரெடியாகி வருகிறது என பதிவிட்டுள்ளனர்.
நெட்டிசன்கள் கமெண்ட்: "சமூக வலைத்தளங்கள் ஒருவரை ஜீரோ டூ ஹீரோ ஆக்கும் திறன் கொண்டது" என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "நான் இந்த லாரி டிரைவரின் வீடியோக்களை பார்த்து இருக்கிறேன்.. சாதாரண ஆண்ட்ராய்டு போன் மூலம் இவ்வளவு புகழ் இவரால் பெற முடியும் என்றால் அனைவராலும் சாதிக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications