Anbil: லஞ்சம் கொடுத்ததாக சொன்ன தனியார் பள்ளிகளை ஏன் விசாரிக்கலை? அன்பில் மகேஷ் வாதம்
சென்னை: லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறிய தனியார் பள்ளி நிர்வாகங்களை ஏன் விசாரிக்கவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 400 கோடிக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

அதன்படி கடந்த 2ஆம் தேதி அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்தனர். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீஸார் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
அன்பில் மகேஷ்
போலீஸாரும் அன்பில் மகேஷை எந்த நெருக்கடிக்கும் உள்படுத்தாமல் அவரிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றனர். விசாரணைக்கு பிறகு நேற்று மாலை அன்பில் மகேஷ், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸார் துன்புறுத்தலா?
அப்போது போலீஸார் துன்புறுத்தினார்களா? முறையாக உணவு, மருந்து உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா? என அன்பிலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் தன்னை போலீஸார் துன்புறுத்தவில்லை. முறையாக உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டது என்றார்.
புழலில் அன்பில்
இதையடுத்து அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடந்தது. அவரது தரப்பு வழக்கறிஞர், "அன்பில் மகேஷை கைது செய்வதற்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் சம்மனை ஏற்று அன்பில் ஆஜராகி, அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது.
போலீஸ் காவலில் அன்பில் மகேஷ்
இதையடுத்து தற்போது போலீஸ் காவலில் நடந்த விசாரணைக்கு அன்பில் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். வழக்கின் புலன் விசாரணைக்கு போலீஸார் கோரிய ஆவணங்கள் அனைத்துமே ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
ரூ 100 கோடி லஞ்சம்
அரசகுமார்தான் ரூ 100 கோடி லஞ்சம் வசூலித்தார். அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என பொய் சொல்லி அரசகுமார்தான் ரூ 100 கோடியை வசூலித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் என்பதை 20 ஆண்டுகளாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையில் கையெழுத்திட்டது அரசு கூடுதல் செயலாளர், அன்பில் மகேஷ் கையெழுத்திடவில்லை.
பள்ளிகளுக்கு அங்கீகாரம்
20 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் என்பது கூட்டாக எடுத்த முடிவு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான அரசாணை பல துறை அதிகாரிகளை கடந்துதான் சென்றுள்ளது. அரசகுமார் பொய் சொல்லியிருந்தால் அன்பில் மகேஷ் என்ன செய்ய முடியும்?
அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்கள் வாக்குமூலத்தை வைத்து அன்பிலை கைது செய்துள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுத்ததாக கூறிய தனியார் பள்ளி நிர்வாகங்களை ஏன் விசாரிக்கவில்லை.
தீர்ப்பு எப்போது?
ரூ 30, ரூ 40 லட்சம் என லஞ்சம் கொடுத்ததாக பள்ளி நிர்வாகங்கள் கூறியுள்ளன. அனைவரும் பணம் கொடுத்தது அரசகுமாரிடமும், புகார்தாரரான இளங்கோவனிடமும்தான். லஞ்சம் கொடுத்தவர்களுக்கு காவல் துறை சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது என அன்பில் மகேஷ் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 10-ஆம் தேதிக்கு அறிவிக்கப்படுகிறது.




Click it and Unblock the Notifications
