ஜாமீன் கேட்ட மாஜி அன்பில் மகேஷ்.. பரபரத்த வாதங்களை தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த திங்கட்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சென்னை ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்த நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த கோரிக்கையின் பேரில் கடந்த 2ஆம் தேதி 3நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தீவிர விசாரணை
இதனையடுத்து கடந்த 3 நாட்களாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் பணம் பெறப்பட்டதாக அளிக்கப்பட புகார் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவை அனைத்திற்கும் அன்பில் மகேஷ் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற காவல்
அப்போது போலீஸ் காவலில் துன்புறுத்தல்கள் ஏதேனும் அளிக்கப்பட்டதா என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு காவல்துறை தன்னை துன்புறுத்தவில்லை என கூறிய அன்பில் மகேஷை 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் மனு விசாரணை
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சத்திய மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ஆஜராகி, "அன்பில் மகேஷ் வீட்டில் கடந்த செப்டம்பர் 16-ந்தேதி போலீசார் சோதனை நடத்தினர். நேரிலும் அவர் போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். தற்போது 3 நாட்கள் காவலில் வைத்து விசாரித்தபோது, போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
போலீசார் விசாரணைக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டு விட்டன. அன்பில் மகேஷை செல்வாக்கான நபர் என்று போலீசார் கூறினாலும், அவர் எங்கும் தப்பிச் செல்லப்போவது இல்லை.
அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பெயரைச் சொல்லி தனியார் பள்ளிகளிடம் அரசகுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளார். ஆனால், பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். பணம் கொடுத்ததை வெளியில் சொன்னால் பள்ளிகளை இயங்க அனுமதிக்க முடியாது என்று மிரட்டியதாகவும் புகார் உள்ளது. அவர் வசூலித்த பணத்துக்கு அன்பில் மகேஷ் பொறுப்பாக முடியாது என வாதிட்டார்.
அதனைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை வருகிற 10ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
