காயத்ரி ரகுராமை மட்டுமல்ல.. டீமையே பந்தாடிய அண்ணாமலை.. கூண்டோடு மாற்றம்.. லிஸ்ட் இதோ!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியிலில் இருந்து 6 மாதங்கள் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமின் மொத்த அணியையும் மாற்றி அதிரடி காட்டி உள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. யார் அவர்கள்?
பாஜக சிறுபான்மை அணி தலைவர் டெய்சி மற்றும் பாஜக ஓபிசி பிரிவு முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா இடையிலான தொலைபேசி உடையாடல் கடந்த மாதம் வெளியாகி பூதாகரத்தை கிளப்பியது.
சூர்யா சிவா டெய்சியிடம் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கேசவ விநாயகம் ஆகியோரது பெயர்களை கூறியது கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.

காயத்ரி ரகுராம்
ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியத இந்த ஆடியோவை வெளியிட்ட தனியார் ஊடகத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பகிர்ந்து இருந்து சூர்யா சிவாவை கடுமையாக விமர்சித்து இருந்தார். "சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இவர்களுக்கு கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

கட்சியில் இருந்து நீக்கம்
இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்." என்று அறிவித்தார். அதேபோல் "ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்." என்றும் உத்தரவிட்டார்.

காயத்ரி ரகுராம் வகித்த பதவி
இந்த நிலையில் பாஜகவில் காயத்ரி ரகுராம் வகித்த வெளிநாடு - அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அந்த பிரிவின் புதிய தலைவராக இசையமைப்பாளர் தினாவை நியமித்தார் அண்ணாமலை. "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலச் தலைவராக இசையமைப்பாளர் தினா அவர்களும் மாநில துணை தலைவர் ஆனந்த் அய்யாச்சாமி அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்" என்று அவர் அறிவித்தார்.

மொத்த அணியும் மாற்றம்
இந்த நிலையில் தற்போது வெளிநாடு - அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் நிர்வாகிகளை மாற்றி இருக்கிறார் அண்ணாமலை. இதற்கான முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. மாநில துணை தலைவர்களாக, இயக்குநர் பேரரசு, எஸ்.வி.வெங்கடேஸ்வரன், சுகு பூப்பாண்டியன், சுறா.என்.முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

மாநில செயலாளார்கள்
அதேபோல் மாநில செயலாளர்கள், அழகன் தமிழ்மணி, எம்.சுதாகர், ராகவ கிருஷ்ணா, சசிக்குமார் சுப்ரமணி, எம்.திருமலை, எஸ்.சிவரஞ்சனி தேவி, பிரித்வி குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். விரைவில் அடுத்தக்கட்ட பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மாநில நிர்வாகம் மீது காயத்ரி ரகுராம் விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில் அவரது மொத்த அணியையும் மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications