பகைன்னா பகை தான்.. நோ காம்ப்ரமைஸ்.. எங்க அப்பா அம்மாகிட்டயே சொல்லிட்டேன்! அண்ணாமலை போட்ட ஆர்டர்!
சென்னை : திமுக vs பாஜக தான் இனி அரசியல், எந்த சமரசத்திற்கும் இடமில்லை. திமுகவினரோடு டச்சேர் இருக்கக்கூடாது என பாஜக நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் இருந்து வந்ததுமே, கமலாலயத்தில் திடீர் மீட்டிங் நடத்தினார் அண்ணாமலை. மாவட்ட தலைவர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பல சீக்ரெட்களை உடைத்துப் பேசி இருக்கிறார் அண்ணாமலை.
திமுகவினரை எதிரியாகத்தான் பார்க்க வேண்டும், திமுகவினரின் திருமண விழாக்களில் கூட பங்கேற்கக்கூடாது, உறவினர்களாக இருந்தாலும் கட்சிக்கு எதிரிதான் எனப் பேசி இருக்கிறாராம் அண்ணாமலை.
மேலும் கட்சிக்கு எதிராக விரோதமாக செயல்பட்டால் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டத் தலைவர்களை அண்ணாமலை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மேலிடம் டூ அண்னாமலை
பாஜகவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகள் நடந்து வந்த நிலையில், டெல்லிக்குச் சென்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. திருச்சி சூர்யா, டெய்சி சரண் ஆடியோ விவகாரம் உட்பட தமிழக பாஜக அரசியல் விஷயங்களை பலவற்றைப் பற்றியும் டெல்லி மேலிட புள்ளிகளுடன் விவாதித்தார் அண்ணாமலை. தேர்தல் நெருங்கிறது, தமிழ்நாட்டில் பாஜக இனி நல்ல விதமாக மட்டுமே ப்ரொஜெக்ட் செய்யப்பட வேண்டும் என டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவசர ஆலோசனை
டெல்லியில் இருந்து வந்த வேகத்தில், கமலாலயத்தில் மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தைக் கூட்டினார் அண்ணாமலை. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளின் செல்போன்கள் வாங்கி வெளியே வைக்கப்பட்டன. கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் தான் பேசும் விஷயங்கள் வெளியே லீக் ஆகிவிடுவதைத் தவிர்க்கவே, நிர்வாகிகளின் அத்தனை பேரின் செல்போன்களையும் வாங்கி வெளியே வைத்துள்ளனர்.

நோ காம்ப்ரமைஸ்
அண்ணாமலை பேசுகையில், திமுகவோடு எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் இல்லை. அவர்களோடு நாம் எக்காரணம் கொண்டும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. நாம் இங்கு இனி எப்போதும் அரசியல் செய்யப்போவதே திமுகவை எதிர்த்துத்தான். அதிமுக vs திமுக என்று இருந்த நிலை இனி திமுக vs பாஜக என்றுதான் இருக்கும். திமுக எதிர்ப்பு வாக்குகள் தான் நம் குறி. பகை என்றால் பகை தான். திமுகவினர் கல்யாணத்திற்குக் கூட பாஜகவினர் யாரும் செல்லக் கூடாது.

என்ன நினைப்பான்?
ஒரு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ, பாஜக மாவட்ட தலைவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். இதை எங்கோ இருக்கும் பாஜக தொண்டன் பார்த்தால் என்ன நினைப்பான்? நான் ஐசரி கணேஷ் தாயார் மறைவுக்கு போனபோது எதிர்பாரா விதமாக உதயநிதியை பார்க்க நேர்ந்தது. அந்த போட்டோ வெளியாகி பெரிய பிரச்சனையே ஆகிடுச்சு. உதயநிதியோடு நாம் காம்ப்ரமஸ் செய்துகொள்ளப் போவதில்லை. ஆனால், எதிர்க்கட்சி என முடிவு செய்துவிட்டால் எதிரியாகத்தான் கருத வேண்டும்.

சொந்தக்காரங்க தான்
கரூர் எம்.பி ஜோதிமணி எங்க உறவினர் தான். ஒரே கோவிலில் சாமி கும்பிடுபவர்கள். அதற்காக அவர்களோடு பேசிக் கொண்டிருந்தால், கட்சித் தொண்டன் என்ன நினைப்பான்? நம்மை எப்படி நம்புவான்? அதனால் எங்க அப்பா, அம்மாவிடமே, ஜோதிமணியுடன் பேசக்கூடாது எனச் சொல்லிவிட்டேன். தொண்டன் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால் நாம் சரியாக இருக்க வேண்டும்." என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார் அண்ணாமலை.

தனித்துப் போட்டி
மேலும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிற ரீதியிலும் அண்ணாமலை பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக இன்றைக்கு பிளவுபட்டு இருக்கிறது. காலையில் எடப்பாடி பழனிசாமி வாழ்க.. மாலையில் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க... என்று நாம் அவர்கள் பின்னால் திரிய முடியாது. தமிழகத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பாஜக பெற்றது. அதே போல், எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக தனித்துப் போட்டியிடும்.

கட்சியை வளர்ப்பதே முக்கியம்
பிரதமர் மோடியிடமே பேசிவிட்டேன். நீங்க உச்சகட்ட புகழில் இருக்கும்போதே தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கவில்லை என்றால் வேறு எப்போது வளர்ப்பது? கூட்டணியில் ஐந்தாறு சீட் வாங்கி ஜெயிப்பதை விட, கட்சியை வளர்ப்பது முக்கியம், அத்தனை சீட்களிலும் நின்றால் வாக்கு சதவீதத்தை உயர்த்தலாம், அட்லீஸ்ட் 20% வாக்குகளை பெற்றால் 2026 தேர்தலில் 80 சீட்களை ஜெயிக்கலாம். இதை உணர்ந்து அனைத்து நிர்வாகிகளும் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறாராம் அண்ணாமலை.

கட் அண்ட் ரைட்
மேலும் கட்சிக்கு எதிராக விரோதமாக செயல்பட்டால் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தலைவர்களை எச்சரித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது அதற்கான வேலைகளில் மட்டுமே கட்சி நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது என அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் சமீபமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக டெல்லி மேலிடம் அண்ணாமலையை கடிந்து கொண்டதன் காரணமாகவே அவரும் கட் அண்ட் ரைட்டாகப் பேசி இருக்கிறார் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications