பரிதவித்து நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள்.. சென்னை அண்ணா சதுக்கத்தில் மனதை பாதித்த 2 விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளியூரிலிருந்து வந்த என் அப்பா, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு விருப்பம் தெரிவித்தார். "சரி" என்று கூறி அவரை அழைத்துச் சென்றேன். பயணத்திற்காக ரயிலில் ஏறினோம். பரங்கிமலையில் இறங்கி வேளச்சேரி வழியாகச் செல்லும் பறக்கும் ரயிலில் பயணித்தேன். ஏனெனில், ஒரு காலத்தில் மடிப்பாக்கத்தில் வசித்தபோது, அந்த வழித்தடத்தில் எப்போதாவது செல்ல மாட்டோமா என்று ஏங்கியது உண்டு. அந்த வழியாகச் செல்ல ஞாயிற்றுக்கிழமை தான் வாய்ப்பு கிடைத்தது. உச்சி வெயிலில் பரங்கிமலை வழியாக அப்பாவுடன் புறப்பட்டேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணா சதுக்கம் செல்ல விரும்பிய நான், சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்காமல், திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இறங்கினேன். பின்னர், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் "வெற்றிப்பயணம்" (மகளிர்க்கான இலவசப் பேருந்து) பேருந்தில் ஏறினோம். அப்பாவிற்கும் எனக்கும் பயணச்சீட்டு எடுத்தேன்; என் மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை. ஒரு சில நிமிடங்களில் அண்ணா சதுக்கம் வந்து சேர்ந்தது. அங்கு இறங்கி உள்ளே சென்றோம். அப்பா மாற்றுத்திறனாளி என்பதால் மெதுவாகவே நடந்து வந்தார்.

Auto-rickshaw drivers on vetri payanam Two heart-wrenching incidents at Anna Square Chennai

அவரை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றபோது, ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் பயணிகள் யாராவது ஏறுவார்களா என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், நான் பார்த்த வரை யாருமே ஆட்டோவில் ஏறவில்லை. நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றன; ஓட்டுநர்கள் ஒருவித விரக்தியுடன் நின்று கொண்டிருந்தனர். மறுபக்கம் ஏராளமான "வெற்றிப்பயணம்" பேருந்துகள் வந்தவண்ணம் இருந்ததால், மக்கள் அதில் ஏறிச் சென்றுகொண்டிருந்தனர். எந்தப் பேருந்திலும் தொங்கிக்கொண்டு செல்லும் அளவுக்கு அதிகக் கூட்டமில்லை.

சரி உள்ளே போகலாம் என்று சென்றபோது, அப்பா ஆர்வத்துடன் முதலில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்றார். அங்குப் புகைப்படம் எடுத்தார். இரண்டு சுயபடங்கள் (Selfie) எடுத்துக்கொண்ட அவரது மனதில் ஒரு ஆத்ம திருப்தியைக் காண முடிந்தது. "அப்பாடா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தை எப்படியோ பார்த்துவிட்டோம்" என்ற திருப்தி அவரது கண்களில் தெரிந்தது. அப்படியே ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி மெதுவாக நடந்து சென்றோம். ஜெயலலிதா அருங்காட்சியகம் (Museum) பூட்டப்பட்டிருந்தது; எம்.ஜி.ஆர் அருங்காட்சியகம் திறந்திருந்தது. அதைப் பார்த்த அப்பா, எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு புகைப்படத்தையும் சுட்டிக்காட்டி, அவற்றின் பின்னணியை விலாவாரியாகக் கூறி சிலாகித்தார். அதன் பின்னர் திருப்தியுடன் வெளியேறி, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றார். அங்குள்ள கட்டிடக் கலை அமைப்புகளைக் கண்டு வியந்தவர், "எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததுதான் இந்த அண்ணா சதுக்கம்" என்று கூறினார். உள்ளே சென்று அண்ணாவின் நினைவிடம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு, கலைஞர் நினைவிடத்திற்குச் சென்றவர் அங்கும் புகைப்படம் எடுத்தார். அங்கு பொறிக்கப்பட்டிருந்த கலைஞரின் ஒரு வசனத்தைப் பார்த்து நெகிழ்ந்தவர், "கலைஞரைப் போல வசனம் எழுதுவது மிகவும் கடினம்" என்றார். அதன்பிறகு கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றார். அவரை அழைத்துச் சென்றேன். ஆனால், அந்தக் கழிவறை மிகவும் மோசமான முறையில் பராமரிப்பின்றிச் சகிக்க முடியாத அளவில் இருந்தது. மூக்கைப் பொத்திக்கொண்டுதான் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து புறப்பட்டுச் சென்று கடலின் அழகை ரசித்துவிட்டு, மெல்ல மெல்ல நடந்து அண்ணா சதுக்கம் வந்தபோது மாலை 4 மணி ஆகியிருந்தது.

அங்கிருந்து மீண்டும் ஊருக்குக் கிளம்பலாம் என்று பார்த்தால், வரிசையாக வெற்றிப்பயணம் பேருந்துகள் வந்தன. அதில் ஏறிப் பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், பயணிகள் யாருமே ஏறாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதிப்பட்டதைப் பார்த்தபோது கஷ்டமாகவும் இருந்தது. அப்பாவைப் பொறுத்தவரை "இனி எப்போது இங்கு வரப்போகிறோமோ?" என்ற ஏக்கத்துடன் விடைபெற்று ஊருக்குச் சென்றார்.

நமக்கு, இத்தனை லட்சம் பேர் வந்து செல்லும் ஒரு பொது இடத்தில் கழிவறை கூட முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறதே என்ற வருத்தம் அதிகமாக இருந்தது. மறுபக்கம் ஆட்டோ ஓட்டுநர்கள் இனி என்ன செய்வார்கள்... ஏற்கனவே ரேபிடோ போன்ற சேவைகளால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், இப்போது இலவசப் பேருந்து திட்டத்தால் முற்றிலும் முடங்கிப்போய்விட்டார்களே என்ற கவலையும் மனதைச் பாரமாக்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+