காலம் மாறிப் போச்சு.. நீங்க வேணா பாருங்க! திமுக வீழ்ச்சிக்கு ‘இதுதான்’ காரணம்! அண்ணாமலையின் ஆருடம்!
சென்னை : இந்தி எதிர்ப்பு போர் திமுகவை 1967ல் அரியணை ஏற்றியது. இப்போது காலம் மாறிவிட்டது. அதே இந்தி எதிர்ப்புதான் திமுக.வின் வீழ்ச்சிக்கும் காரணமாகப்போகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஒன்றிய பாஜ அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அதிமுக ஓபிஎஸ், காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
அதே நேரத்தில் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தி எதிர்ப்புதான் திமுக.வின் வீழ்ச்சிக்கும் காரணமாகப்போகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தீர்மானம் மட்டும் போடத்தான் இந்த ஆட்சியா? தமிழக அரசின் இருமொழி கொள்கை என்பது என்ன? ஆங்கிலம் கட்டாயம், ஆனால் தமிழ் கட்டாயம் இல்லை என்பதுதானே?

இருமொழிக் கொள்கை
அதனால்தான் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற பெயரில் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தமிழே படிக்காமல், படிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இது தமிழ்மொழிக்கு செய்யும் துரோகம் இல்லையா? தமிழக அரசு செலவில் தமிழ்மொழியை படிக்காமலேயே, கல்லூரி வரை படிக்க வசதியாக, அரசு செலவில் இயங்கும் அரசு பள்ளிகள் பட்டியல் உண்மையா? இல்லையா? பயிற்றுமொழியாக உருது மொழியில் 56 பள்ளிகள், மலையாள பள்ளிகள் 50, தெலுங்கு பள்ளிகள் 35, கன்னட பள்ளி 1, இதுதவிர பாடமொழியாக உருது மொழியில் 204 பள்ளிகள், மலையாள மொழியில் 50 பள்ளிகள், தெலுங்கு மொழியில் 234 பள்ளிகள், கன்னட மொழியில் 60 பள்ளிகள் அரசு செலவில் இயங்குகின்றன.

மறுப்பது ஏன்?
தமிழ்மொழியை நீக்கிவிட்டு பிற மொழிகளை சொல்லித்தரும் அரசு இந்தியை மட்டும், விருப்பம் உள்ளவர்கள் படிக்க அனுமதி மறுப்பது ஏன்? கல்வியில் ஏன் அரசியல் செய்கிறீர்கள்? 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது? தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க.வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது? ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார்.

திமுகவின் வீழ்ச்சி
தமிழுக்கு எதுவுமே செய்யாமல் தமிழுக்காக போராட்டம் என்ற பொய்ப் பிரசாரத்தை இன்னும் எத்தனை நாள் திமுகசொல்லிக்கொண்டு இருக்கும்? இந்தி எதிர்ப்பு போர் திமுகவை 1967-ல் அரியணை ஏற்றியது. இப்போது காலம் மாறிவிட்டது. அதே இந்தி எதிர்ப்புதான் திமுகவின் வீழ்ச்சிக்கும் காரணமாகப்போகிறது" என அந்த அறிக்கையில் பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications