"மோட்டார் வாய்" சூர்யா சிவா.. அண்ணாமலை அனுப்பியதாக என் அலுவலகம் வந்தார்.. அலிஷா அப்துல்லா புகார்!
சென்னை: அண்ணாமலை அனுப்பினார் என்று கூறி திருச்சி சூர்யா சிவா தன் அலுவலகம் வந்து தன்னை உருவ கேலி செய்தததாகவும், ஆடை உடுத்துவது குறித்து தேவையில்லாமல் பேசியதாகவும் பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் இரு நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சூர்யா சிவா, அலிஷா அப்துல்லா பற்றிய வீடியோ இருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, தன்னை பற்றிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு அக்கட்சியின் மாநில ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் பதவியை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் சூர்யா சிவா - டெய்சி இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்து சூர்யா சிவா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பாஜகவில் இருந்து விலகல்
ஆனால் சூர்யா சிவா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, தான் கட்சியில் இருந்து விலக கேசவ விநாயகம், அமர் பிரசாத் ரெட்டி மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரே காரணம் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து ஏராளமான ஊடகங்களில் பேட்டியளித்து வரும் சூர்யா சிவா, பாஜக குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். குறிப்பாக பாஜகவில் இருக்கும் பெண்கள் பற்றி இழிவான கருத்துக்களை பேசி வந்தார்.

அலிஷா அப்துல்லா வீடியோ
இதனிடையே தனியார் தொலைக்காட்சி நெறியாளர் சூர்யா சிவாவிடம் நடத்திய நேர்காணலில், அண்மையில் பாஜகவில் இணைந்த அலிஷா அப்துல்லா குறித்து விவகாரமான கருத்துக்களை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அலிஷா அப்துல்லாவின் வீடியோ இருப்பதாகவும் சூர்யா சிவா மற்றும் நெறியாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அலிஷா அப்துல்லா பேட்டி
இந்த நிலையில் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து அலிஷா அப்துல்லா கூறுகையில், நான் பாஜகவில் சேர்ந்ததற்கு காரணம் அண்ணாமலை தான். நான் பாஜகவில் சேர்ந்து 10 நாட்கள் கழித்து திருச்சி சூர்யா எனக்கு போன் செய்தார். நான் திருச்சி சூர்யா என அறிமுகப்படுத்திக் கொண்டார். யார் உங்களுக்கு என் செல்போன் நம்பரை கொடுத்தார்கள் எனக் கேட்டேன். அண்ணாமலை தான் நம்பர் கொடுத்தார் எனச் சொன்னார்.

கேவலமாக பேசிய சூர்யா சிவா
கட்சியில் புதிதாக சேர்ந்துள்ளீர்கள் என்பதால் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக நம்பரை கொடுத்தார் எனக் கூறினார். பாஜகவில் இணைந்த போது, திருச்சி சூர்யா சிவா போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அலுவலகத்தில் சந்தித்த திருச்சி சூர்யா, அவரின் பெருமைகளையே பேசினார். நான் நேரடியாக விஷயத்திற்கு வாருங்கள் என்று கூறினேன்.

கேவலமான பேச்சு
அப்போது நீங்கள் நீங்கள் விளையாட்டு பிரிவில் இருக்க கூடாது. மகளிர் பிரிவுக்கு செல்லுங்கள் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு வாருங்கள். ஆனால் விளையாட்டு பிரிவில் மட்டும் இருக்க கூடாது என்றார். அதுமட்டுமல்லாமல் அமர் பிரசாத் ரெட்டி பற்றியும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பற்றியும் கேவலமாக பேசினார்.

உருவ கேலி செய்த சூர்யா சிவா
அதுமட்டுமல்லாமல், சூர்யா சிவா தன்னை சந்தித்த போது, சேலை கட்டுவது சரியில்லை. ஜிம்-மிற்கு செல்லும் போது ஷார்ட்ஸ் போன்ற உடைகளை அணிய கூடாது, மூத்த நிர்வாகிகள் தப்பா நினைப்பார்கள் என்று கூறியதோடு, என்னை உருவக் கேலி செய்தும், உடல் பாகங்கள் குறித்தும் தவறாக பேசினார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமர் பிரசாத் ரெட்டி இருவரிடமும் தெரிவித்தேன்.

"மோட்டார் வாய்" சூர்யா சிவா
சிறுபான்மை பெண்கள் பாஜகவில் இருக்க கூடாது என்று டார்க்கெட் செய்கின்றனர். "மோட்டர் வாய்" சூர்யா சிவா எனது அலுவலகத்திற்கு வந்து என்னென்ன பேசினார் என்பது பற்றிய ஆதாரங்கள் இருக்கிறது. என் அலுவலகத்தில் 23 கேமராக்கள் இருக்கிறது. இது சிசிடிவி கேமராக்கள். அது ஹனி ட்ராப் இல்லை. நான் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. பாஜக தலைவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்.

ஆதாரம் இருக்கிறது
அனைத்திற்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால், அதை வெளியிடுவதற்கு நான் மோசமானவள் இல்லைபாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகளை பெண்கள் தட்டிக் கேட்க வேண்டும். அதேபோல் எனது வீடியோ இருந்தால் வெளியிடுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications